புதன், 30 ஆகஸ்ட், 2017

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.

மேலும் பள்ளியிலிருந்து கற்ற கல்வி அனுபவ வாழ்விற்கு உதவாது என்று சொல்லவும், லஞ்சம் வாங்க கூடாது, பொய் சொல்லக் கூடாது என்று பள்ளியிலிருந்து ஒருவன் கற்ற விசயங்களை அவன் விட்டு விட சொல்லி கேலி செய்யவும், வாத்தியார்களை மட்டம் தட்டவும் இதை சொல்வார்கள்.

மாணவன் ஒருவன் கேட்கிறான்.

“டீச்சர், அதான் கணக்குப் போடுவதற்கு கால்குலேட்டர் வந்து விட்டதே. பிறகு ஏன் இன்னமும் எங்களுக்கு அபாகஸ் பற்றி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?”

ஆனால் கால்குலேட்டர் இயங்கும் விதத்தைப் பற்றி அறிந்துகொள்ள, பிற்காலத்தில் அவனே ஒரு நவீன கால்குலேட்டரை உருவாக்க முதலில் அபாகஸிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியாது.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுதான். ஆனால் ஏட்டிலே சுரைக்காயைப் பற்றி படிக்காதவனிடம் உண்மையான சுரைக்காயைக் காட்டி இது என்னவென்று கேட்டால், அது சுரைக்காய் என்று சொல்ல அவனுக்குத் தெரியாது.

எனக்குத் தெரிந்தவரை இப்போது பெரும்பாலான பள்ளிகளில் பதினோராம் வகுப்புப் பாடத்தை நடத்துவதே இல்லை. நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டும் நடத்துகிறார்கள். ஒருவேளை நடத்தினாலும் அதிலே சில விசயங்களை விட்டு விடுகிறார்கள்.

அரிச்சுவடி பதினோராம் வகுப்பிலல்லவா இருக்கிறது. அதை விட்டு விட்டால் பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் எப்படி அவனுக்குப் புரியும்?.


நமது மக்களும் சரி, மாணவர்களும் சரி சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் படிப்பவன்தான் புத்திசாலி என்று ஒரு தவறான கருத்தை கொண்டுள்ளனர்.

சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் முழுமையும் பகுப்பாய்வு, கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கே அறிவியல் கூற்றுகளுக்கும், விளக்கங்களுக்கும் முக்கியத்துவமில்லை.

நமது மாநிலப் பாடத்திட்டத்தில் அறிவியல் கூற்றுகளுக்கும், விளக்கங்களுக்கும் தரப்படும் முக்கியம் கணக்கீடுகளுக்குத் தரப்படவில்லை. இரண்டு முறையிலுமே ஒரு பகுதியில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவனுக்கு சி.பி.எஸ்.ஈ வினாத்தாளையும், சி.பி.எஸ்.ஈ யில் படித்தவனுக்கு மாநிலப் பாடத்திட்ட வினாத்தாளையும் கொடுத்து எழுதச் சொன்னால் இருவருமே பெயிலாகி விடுவார்கள்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

கூகுள் என்ன கடவுளா?

சிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கூகுளில் கிடைப்பது அனைத்தும் பரம சத்தியம்.

கூகுள் என்ன கடவுளா? எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க.. இல்லை அரிச்சந்திரனா? உண்மையை மட்டுமே பேச.. அதிலும் நம்மளைப் போன்றவர்கள் எழுதிய விசயங்கள் தான் கிடைக்கின்றன. நாம் பொய்யாக எழுதினால் அதிலேயும் பொய்கள் கிடைக்கும்.

கூகுளில் சமீபத்தில் ஒரு தவறான விசயத்தைப் பார்த்தேன். கூகுள் மேப்பில் ஆங்கிலத்தில் சில இடத்தின் பெயர்களைப் டைப் செய்து அதை அப்படியே ஏதோ ஒரு மொழிபெயர்ப்பு மென்பொருள் கொண்டு மொழிபெயர்த்து தமிழில் போட்டு இருக்கிறார்கள்.


அதிலே இருக்கும் சில தவறுகளைப் பாருங்கள்.

THANDALAM  என்பது ஆங்கிலப் பெயர். அதை தண்டலம் என்று தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் கூகுள் அதை தூண்டலாம் என்று காட்டுகிறது.

BRINDAVAN NAGAR என்பது ஆங்கிலப் பெயர். அதை பிருந்தாவன் நகர் என்று தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் கூகுள் அதை பிரிந்தவன் நகர் என்று காட்டுகிறது.

SUDHA AVENUE என்பது ஆங்கிலப் பெயர். அதை சுதா அவன்யூ என்று தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் கூகுள் அதை சுதா அவனுக்கே என்று காட்டுகிறது.இப்படித்தான் மகாபாரதம் தெரிந்த ஒரு நபரிடம் யூடியூபில் மஹாபாரதம் பற்றி பதிவர்கள் போடும் விசயங்களை கூறிப்பாருங்கள். அவர்கள் உங்களை அடிக்க வருவார்கள். அவ்வளவு தவறான விசயங்கள்.

மிக ஆழமான இலக்கிய விசயங்களை, வரலாற்று நிகழ்வுகளை கூகுளில் தேடிப்பாருங்கள். அவை கிடைக்காது. ஏனெனில் இண்டர்நெட்டில் நேரத்தை விரையமாக்குபவர்களுக்கு அவை தெரியாது. விசயம் தெரிந்தவர்கள் இண்டர்நெட்டை விரும்புவதில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு பையனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவனுடைய காதலிக்கு நன்கு ஆங்கிலம் தெரியும். அவள் இவனுக்கு என்று அனுப்பியதை ஆவேசம் என்று படித்தான். இரண்டு பேருக்கு இடையில் இந்த மாதிரி தவறுகள் இருப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் எல்லோரும் தேடுகிற, சரி என்று நம்புகிற கூகுள், விக்கிபீடியாவில் இந்த மாதிரி இருப்பதை என்னவென்று சொல்வது?

அதை மட்டுமே நம்புகிறார்களே, அவர்களை என்னவென்று சொல்வது?

வெள்ளி, 14 ஜூலை, 2017

நான்

நான் இங்கே இல்லாதபோது
நீ என்னுடன் மிக சந்தோஷமாக இருக்கிறாய்

நான் இங்கே இல்லாதபோது
உனக்கு இங்கே எதிராளி இல்லை

நான் இங்கே இல்லாதபோது
உனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன

நான் இங்கே இல்லாதபோது
உனக்கு வேண்டிய அரவணைப்பு கிடைக்கிறது

நான் இங்கே இல்லாதபோது
உனக்கு எந்தக் கஷ்டமும் உருவாவதில்லை

இங்கிருக்கும் நான்
உனது சந்தோஷத்தை அழிக்கிறது
என்து நிம்மதியையும் அழிக்கிறது

நான் இங்கே இருக்கும்போது
என்னருகில் நீ வரவேண்டாம்

நான் இங்கே இல்லாதபோது
மட்டும் என்னோடு விளையாடு

நான் இங்கே இல்லாதபோது
அனைத்தும் இங்கே கிடைக்கிறது – ஏன்
கடவுள் கூட கிடைக்கிறார்.

செவ்வாய், 20 ஜூன், 2017

E=mc2

பொருட்களின் நிறைக்கும், அதில் பொதிந்துள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை மிகத் தெளிவாக விளக்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சமன்பாடு.

E=mc2

“ஒரு பொருளின் நிறையை, ஒளியின் வேகத்தின் வர்க்கத்துடன் பெருக்கினால் எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு ஆற்றல் ஒவ்வொரு பொருளிலும் மறைந்துள்ளது” என்பதே அந்த சமன்பாட்டின் சாரம்.

அதன்படி ஒரு கூழாங்கல்லுக்குள் கூட அபரிமிதமான ஆற்றல் ஒளிந்திருக்கிறது. ஆனால் நமக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்.

நவீன அறிவியல் உலகப் பொருட்கள் கதிர் வடிவிலும், நிறையுடன் கூடிய பொருள் வடிவிலும் என இரு நிலையில் காட்சியளிக்கின்றன என்று கூறுகிறது.

அணுவில் இருக்கும் வெளிப்புறப்பாதையான எலக்ட்ரான்களின் வட்டத்திலும், அந்த எலக்ட்ரான்களின் துணைகொண்டுமே பெரும்பாலான வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன. அந்த எலக்ட்ரான்களின் வட்டத்திலோ மிகக்குறைவான ஆற்றலே உள்ளது.

ஆனால் அதையும் தாண்டி அபரிமிதமான ஆற்றல் அணுக்கருவினுள் இருக்கின்றது. அதை வெளியில் எடுப்பதும் கடின காரியம். வெளியில் எடுத்தால் கிடைக்கும் ஆற்றலும் அபரிமிதமானதாகும்.

அப்படி அணுக்கருவினுள் இருக்கும் ஆற்றலை வெளியில் எடுத்துதான் அணுகுண்டு வெடிக்கப்படுகிறது. அணு உலைகள் மின்சாரத்தை தயார் செய்கின்றன.

நாம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் பொருளல்ல. ஆற்றல் ஓய்வில் இருக்கும் வடிவமே. அது போல ஆற்றல் என்பது பொருளிலுள்ள சக்தி இயக்கத்தில் வருவதே. ஆக பொருள், ஆற்றல் என்ற இரண்டும் பிரபஞ்ச இருப்பின் இருவேறு வடிவங்களே.

அபரிமிதமான ஆற்றல் துகள்களாக அணுக்கருவினுள் வைக்கப்பட்டுள்ளது. அணுக்கருவை பிளந்தால் எத்தனை ஆற்றல் வெளிப்படுமோ அத்தனை ஆற்றல் அந்தத் துகள்களை ஒன்று சேர்த்து அணுக்கருவை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் புரியும் படியாகக் கூற வேண்டுமாயின், ஒரு கிலோகிராம் பொருளில் உள்ள அனைத்து அணுக்கருக்களையும் பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றல், நாற்பது மெகா டன் டி.என்.டி வெடிமருந்தை வெடிக்கும்போது கிடைக்கும் ஆற்றலுக்கு சமம். 

வேறுவிதமாகக் கூறினால், அந்த ஆற்றலைக் கொண்டு நூறு லட்சம் வீடுகளுக்கு மூன்றாண்டுகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கமுடியும்.

ஒரு கிலோகிராம் பொருளுக்குள்ளே இவ்வளவு சக்தி இருக்குமாயின், எழுபது கிலோ மனிதனுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்? ஒரு லாரி மண்ணிலே எவ்வளவு சக்தி இருக்கும்?

அப்படியென்றால் இந்த பூமியின் மொத்த நிறையிலும் எவ்வளவு சக்தி இருக்கும்? பிரபஞ்சத்திலுள்ள மொத்த சக்தி எவ்வளவு இருக்கும்?
அப்பப்பா......! தலையே சுற்றுகிறதா?..