திங்கள், 17 ஏப்ரல், 2017

தேவையான வரலாறு-5 (க்ளாடி ஈதர்லி, ஐன்ஸ்டீன்)

“இரண்டாம் உலகப்போர் நடந்தது. அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு போட்டது” என்றுதான் வரலாற்றிலே கற்றுத்தரப்படுகிறது. அதனைத் தொட்டு நடந்த நெஞ்சை உருக்கும் பல சம்பவங்கள் கற்றுத்தரப்படவில்லை. மேலும் நமக்கு அவற்றைக் கற்றுக் கொள்வதில் போதிய ஆர்வம் இல்லை.

குண்டு போடச்சொன அமெரிக்காவின் ஆணையை ஏற்று அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவன் க்ளாடி ஈதர்லி என்கிற அமெரிக்க மேஜர். அவனுக்கு தொடர்ந்து பல பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

தனது கணவன் பதக்கம் வாங்கியதைக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்தாள் அவன் மனைவி. ஆனால் அந்தப் பதக்கங்கள் பல ஆயிரம் உயிர்களைக் காவு வாங்கியதற்காக தரப்பட்டது என்று அறிந்தவுடன் அவள் கணவனை முழுவதுமாக வெறுத்தாள். பிள்ளைகள் அவனை ஒரு எமனைப் போல பார்க்கத் துவங்கினர். விவாகரத்து கேட்டாள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

முழுநேரக் குடிகாரன் ஆனான். ஓராண்டிற்குள் கியூபாவிற்கு சட்ட விரோதமாக ஆயுதம் கடத்த முயற்சித்தான் என எந்த அமெரிக்காவுக்காக வேலை செய்தானோ அதே அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டான். வேலையில் இருந்தும் துரத்தப்பட்டான். தொடர்ந்து சிறைத்தண்டனை.

மன உளைச்சல் மற்றும் குற்ற உணர்ச்சியில் தற்கொலைக்கு முயன்றான். ஆனால் அவனை எமனும் ஏற்றுக் கொள்ளவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியக்காரனாக டெக்ஸாசில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

பின் கொஞ்சம் குணமானான். தொடர்ந்து ஓரிடத்தில் விற்பனையாளராக பணியாற்றினான். மீண்டும் கொடூரமான ஆயுதம் தாங்கி கொள்ளையடிக்க முற்பட்டான் என்று குற்றம் சாட்டப்பட்டான். சிறைத்தண்டனை. மீண்டும் தற்கொலை முயற்சி செய்தான். மீண்டும் எமன் அவனை ஏமாற்றினான். தொடர்ந்து நிரந்தர பைத்தியமானான். அதன் பிறகு அவன் என்ன ஆனான் என்ற சரியான தகவல் கிடைக்கவில்லை.

அவனுக்கு வைத்தியம் செய்த மனநல மருத்துவர், “இந்த மனிதன் மனதில் தனது மனைவி, குழந்தைகள், மற்ற மனிதர்கள், சமூகம் குறித்த எந்தவித நியாய உணர்வோ, பொறுப்புணர்ச்சியோ சிறிதும் இல்லாதவனாக இருக்கிறான்” என்று அவனது ஆழ்மனதை ஆராய்ந்து கூறுகிறார்.

ஆனால் மற்றொருபுறம் அணுகுண்டு போடப்பட்டதில் இருந்து இரண்டு நாட்கள் ஒரு பச்சைக் குழந்தையைப் போல தனியறையில் தேம்பித் தேம்பி அழுகிறார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஏனெனில் E=mc2 என்ற அறிவியல் சமன்பாட்டை வகுத்து அதனை வெளியிட்டவர் அவர்தான். மேலும் அதனை சரியாகப் புரிந்துகொள்வதன் மூலம் அணு சக்தியை வெளிக்கொண்டு வரலாம், ஆயுதமும் தயாரிக்கலாம் என்று அமெரிக்க அரசுக்கு கடிதமும் எழுதியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தான் கண்டுபிடித்த்தன் நோக்கம் சரியானதுதான் என்றாலும் அது அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டு அழிவுசக்தியாக மாறுவதை அவராலும் தடுக்க முடியவில்லை. ஆகையால்தான் பிரபஞ்ச சக்திகளைப் பயன்படுத்தும் சூட்சுமத்தை விஞ்ஞானமாக அனைவருக்கும் கற்றுத்தராமல் அதை ஆன்மீகத்தோடு இணைத்து வைத்தனர் போலும் நமது முன்னோர்கள்.

வன்முறைப் பாதையில் தான் செய்த பாவத்தால், அது அளித்த சாபத்தால் வாழ்வை அழித்துக் கொண்டவன் வரலாறும், உலகம் போற்றும் விஞ்ஞானியானாலும் அவரால் நிகழந்த பெரும் தவறும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.

4 கருத்துகள்:

  1. ஒவ்வொருத்தரின் மனச்சாட்சி கொடுக்கும் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க வழியில்லை...

    பதிலளிநீக்கு
  2. வரலாறு என்பதே கசப்பான பாடமாக ஆக்கி விட்டார்கள்... இந்தியா இதுவரை எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை என்று கூறுவார்கள்... அது உண்மை இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. இது போல் புது விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு