ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆண் பிள்ளை அழக்கூடாது

“இந்த உலகம் நேர் எதிர் இரட்டைகளால் ஆனது. இரண்டு தன்மைகளும் ஒன்று கூடியே முழுமையை உருவாக்குகின்றன. மேலும் அந்த தன்மைகளில் அதன் எதிர் தன்மையின் கூறு கொஞ்சமேனும் இருக்கும்” என்று யின்-யாங் தத்துவம் கூறுகிறது.

அது உண்மைதான்.

உலகில் உள்ள எல்லா விசயங்களும் மேடு - பள்ளம், பகல் – இரவு, மகிழ்ச்சி – துக்கம், வாழ்வு – மரணம், அன்பு – வெறுப்பு என்று இரட்டைகளாகத்தான் இருக்கின்றன.

அது போல ஆண்மையில் பெண்மையும், பெண்மையில் ஆண்மையும் இருக்கிறது என்பதையே அர்த்தநாரீஸ்வரர் கோலம் விளக்குகிறது.

பெண்ணை அமைதியாக, பொறுமையாக இருக்க இந்த சமூகம் பயிற்றுவிப்பதைப் போல் ஆணை அழக்கூடாது, வெட்கப்படக் கூடாது என்று பயிற்றுவிக்கிறது. இவை இரண்டுமே முட்டாள்தனமானவை. மேலும் இயற்கைக்கு எதிரானவை.

ஒரு பெண் என்பவள் பெண்மை தன்மை அதிகம் கொண்டவள்தான். ஆனால் அவளுக்குள் ஆண்மையும் கொஞ்சம் இருக்கும்.

அவளும் சில சமயங்களில் கோபம் கொள்வாள். முரட்டுத்தனமாக நடந்து கொள்வாள். போராடுவாள். இதெல்லாம் இல்லாமல் பெண் என்பவள் இல்லை.

அது போல ஆணும் எந்த நேரத்திலும் போராட்ட குணத்துடனேயே இருக்க முடியாது. தாயைப் போல இருக்கவும் செய்வான். கஷ்டத்தை கண்டு அழுவான். கழிவிரக்கம் கொள்வான். இவையெல்லாம் ஆணுக்குள் இருக்கும் பெண்மையின் வெளிப்பாடுகள்.

ஆனால் சமூகம் ஆணுக்குள் இருக்கும் பெண்மையை அழிக்கவே நினைக்கிறது. மனைவியோடு சமாதானமாகப் போனால் பெண்டாட்டி தாசன். அழுதால் பெட்டை. இப்படி தூற்றுகிறது.

அதென்ன தத்துவம் என்று விளங்கவில்லை. 

“ஆண் பிள்ளை அழக்கூடாது”

இதை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கூறுகிறார்கள். அவன் அழுதால் கரைந்து போய்விடுவானா என்ன?

அழுகை வரும் போது அழுது பாருங்கள். எத்தனை விடுதலை உணர்வு வருகிறது என்று புரியும். இல்லையென்றால் கோபம் தலைக்கேறும். விரக்தி உருவாகும். தொண்டை அடைக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது.

நீண்ட நெடுங்காலமாக ஆணுக்குள் இருக்கும் பெண்மையும், பெண்ணுக்குள் இருக்கும் ஆன்மையும் அமுக்கப்பட்டே வந்திருக்கிறது.

இக்காலத்தில் பெண்ணியவாதிகள், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையை கிளர்ந்தெழ வைத்து விட்டார்கள். ஆனால் ஆணுக்குள் இருக்கும் பெண்மைக்கு இன்னமும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

உலகில் ஆண்மைத்தன்மை அதிகரித்து விட்டது. எங்கும் போராட்டம் உருவாகிக் கொண்டு வருகிறது. இப்போது பெண்மையின் அரவணைப்பு உலகிற்கு தேவைப்படுகிறது.

ஆண் தனக்குள் இருக்கும் பெண்மையை கண்டு கொள்ள வேண்டும். அழத் தோன்றினால் அழ வேண்டும். வெட்கம் வந்தால் அதை அனுமதிக்க வேண்டும். அது போல பெண்ணும் தனக்குள் இருக்கும் ஆண்மையை கண்டு கொள்ள வேண்டும். சத்தமாக சிரிக்கத் தோன்றினால் சிரிக்க வேண்டும். எதுவும் தவறல்ல. இதெல்லாம் ஒரு நல்ல சமிக்ஞை.

ஆணுக்குள் பெண்மை இருப்பதற்கும், பெண்ணுக்குள் ஆண்மை இருப்பதற்கும் மதிப்பளியுங்கள். எல்லாம் நலமாக இருக்கும்.

6 கருத்துகள்:

 1. ஆணுக்குள் பெண்மை, பெண்ணுக்குள் ஆண்மை என்பது எங்கும் உள்ளதுதான். அதனைப் பற்றி சரியான புரிதல் நம்மிடம் இல்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 2. ஆணுக்குள் பெண்மை இருப்பதற்கும், பெண்ணுக்குள் ஆண்மை இருப்பதற்கும் மதிப்பளிப்போம்
  அருமை

  பதிலளிநீக்கு
 3. அழுகை என்பது உணர்வின் வெளிப்பாடு அதைத்தடைசெய்தல் அறியாமை

  பதிலளிநீக்கு
 4. ஆண் அழ கூடாது என்று சொல்லிய சமூகம், பெண்ணனை அழ வைக்க கூடாது என சொல்லவில்லை... இப்படி சொல்லி சொல்லியே நம்மை இந்த சமூகம் வளர்த்து விட்டது.... நல்லதொரு பதிவு...

  பதிலளிநீக்கு
 5. என் தாய் இறந்த போது எல்லோரும் என்னையே பாரத்தார்கள் நான் அழுகிறேனா..என்று... ஆனால் அன்று அழவில்லை...

  பதிலளிநீக்கு