சனி, 16 ஜூன், 2018

கடவுள் தெரிகிறார் - 4

பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணுவின் தொழில்களை ஒரு வாகனத்தில் இருக்கும் ஆக்சிலரேட்டர், பிரேக், மற்றும் கிளட்சின் செயல்பாடுகளோடு ஒப்பிடுகிறார் மறைஞானியான ஓஷோ.

அவரது ஒப்பீடுகள் முழுவதும் சரியே.

பிரம்மா படைப்புத்தொழிலை செய்வதுபோல் வண்டி வேகமெடுத்துச் செல்ல ஆக்சிலரேட்டர் உதவுகிறது. வேகமெடுத்து சென்று கொண்டிருக்கும் வண்டியை நிறுத்துவதற்கு பிரேக் உதவுகிறது. இந்த இரண்டின் செயல்பாடுகளை அவை தேவையானபோது மட்டும் பயன்படுத்தி ஒருங்கிணைக்க கிளட்ச் உதவுகிறது.

எல்லா வாகனங்களிலும் இந்த மூன்றும் இருக்கிறது.

கிளட்ச் இல்லாத இருசக்கர வாகனங்களில் கூட ஆட்டோகிளட்ச் (தானியங்கி கிளட்ச்) என்ற தொழில்நுட்பம் இருக்கிறது. அதாவது கிளட்சின் வேலை மறைமுகமாக நடைபெறுகிறது.

நாம் பயன்படுத்தும் மிதிவண்டியில் கூட இவை இருக்கிறது. பிரேக் ஏற்கனவே இருக்கிறது. மிதிப்பவனின் கால்தான் ஆக்சிலரேட்டர். அவை இரண்டையும் ஒழுங்குபடுத்தும் கிளட்சாக மிதிப்பவனே இருக்கிறான். பிரேக் போடவேண்டிய தருணம் வரும்போது தானாகவே அவனது கால்கள் மிதிப்பதை நிறுத்தி விடுகின்றன.

சிவன் வழிபாடு ஆதிகாலத்தில் இருந்தும், விஷ்ணு வழிபாடு பிற்பாடும் தோன்றியது போல ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்ட வண்டிகளில் கிளட்ச் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

பிரம்மா படைப்புத்தொழிலை செய்கிறார். சிவன் அழிக்கும் வேலையை செய்கிறார். அதே போல் இவ்விருவரின் வரம்பெற்றவர்கள் அவர்களைப் போலவே செயல்படுகின்றனர்.

பிரம்மாவின் வாரிசுகளான பிரஜாபதிகள் படைக்கும் தொழிலை செய்கின்றனர். அதேபோல் புராணங்களில் வரும் சிவனின் பக்தர்களும், சிவனிடம் வரம் பெற்றவர்களும் பெரும்பாலும் அழிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ராமாயணத்தில் வரும் ராவணன், சிவனிடமே சீடனாக இருந்து அஸ்திர வித்தைகளை கற்ற பரசுராமர், பாண்டவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்த துரோணர், காந்தாரிக்கு நூறு வரங்களாக கொடுக்கப்பட்ட கௌரவர்கள், இரவில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பாண்டவர்களைக் கொன்ற அஸ்வத்தாமன் இப்படியாக அனைவருமே அழிவின் சின்னமாக இருந்தவர்கள்தான்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை ஆராய்ந்தால் இன்னும் கொஞ்சம் விளங்கும். அவர்கள் அனைவருமே கொஞ்சம் உக்கிரமானவர்கள் தான். பாசத்தைக் கூட கோபத்துடனும், அடக்குமுறையாகவும் வெளிப்படுத்துபவர்கள்.

உங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான சிவபக்தர்களை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். இது இன்னும் கொஞ்சம் விளங்கும்.

காக்கும் கடவுளான விஷ்ணு ஒருவகையில் பார்த்தால் சக்தியற்றவர். ஆனால் பிரம்மா, சிவன் இருவரையும் தன் வேண்டுகோள் படி வேலை செய்ய வைப்பவர். அந்த வகையில் பார்த்தால் அபரிமிதமான சக்தி பெற்றவர். அவரால் படைக்கவும், அழிக்கவும் முடியும்.

இது வாகனத்தில் இருக்கும் கிளட்ச் எந்தவொரு குறிப்பிட்ட வேலையையும் செய்யவில்லை என்றாலும் ஆக்சிலரேட்டர், பிரேக் இரண்டின் வேலையையும் கட்டுப்படுத்துவதை போன்றது.

தர்மத்தை ஸ்தாபிக்க வந்தேன்என்று ஒருபுறம் கூறும் கிருஷ்ணன், “யுத்தத்தின் பலரை அழித்து பூமியின் பாரத்தை குறைக்க வந்தேன்என்று மறுபுறம் கூறுகிறான். இந்த இரண்டையும் அவன் செய்தான். இப்படித்தான் விஷ்ணு அவதாரங்கள் அனைத்தும். பிரம்மா மற்றும் சிவன் இருவரின் வேலையையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி உலகில் சமநிலையைக் கொண்டுவருகிறது.

மேட்டை நோக்கி செல்லும்போது ஆக்சிலரேட்டரை அதிகமாகவும், பள்ளத்தை நோக்கி செல்லும்போது பிரேக்கை அதிகமாகவும் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டு நேரத்திலும் கிளட்சை அதிகமாக பயன்படுத்துகிறோம். அது போலத்தான் விஷ்ணுவின் பணியும். இதனால் விஷ்ணு மட்டுமே சர்வவல்லமையுள்ளவர் என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. பிரம்மாவும் சிவனும் இல்லாதபோது விஷ்ணுவால் ஒன்றும் செய்யமுடியாது.

விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்து உருவானவரே பிரம்மா. எனவே விஷ்ணு படைப்பிற்கு ஆதாரம் என்று ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. விஷ்ணுவின் சுதர்சனச்சக்கரம் சிவபெருமானிடம் இருந்து வரமாகப் பெறப்பட்டது என்று இன்னொரு புராணக்கதை சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்த இரண்டு கதைகளும் உண்மையென்றால் விஷ்ணு ஒன்றுமற்றவர் ஆகிவிடுகிறார்.

தேவையான நேரத்தில், தேவையான அளவில் பிரம்மா, மற்றும் சிவனின் செயல்களை ஊக்குவிப்பவராக விஷ்ணு இருக்கிறார்.

ஒரு நாட்டில் போர் நடந்து முடிந்த அடுத்த சில வருடங்களில் அதிகப்படியான ஆண்குழந்தைகள் பிறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். போரில் அழிந்த ஆண்களுக்கு ஈடாக ஆண் குழந்தைகளைக் கொடுக்கிறார் பிரம்மா.

அதே போல் ஆயிரம் பெண்குழந்தைகளுக்கு ஆயிரத்து முப்பது ஆண்குழந்தைகள் பிறந்து விடுகிறபோது, அதில் சில ஆண்குழந்தைகளை வளரும்போது கொன்று விடுகிறார் சிவன்.

இப்படியாக இருவரும் செய்யும் தொழிலை ஒரு வாகனத்தின் முக்கிய பாகங்களோடு ஒப்பிடலாம்.
(தெரிவார்...)   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக