செவ்வாய், 29 செப்டம்பர், 2015

அம்மாவின் மறுபக்கம்

அம்மா என்ற வார்த்தைக்கு இதுவரை எத்தனையோ பேர் எத்தனையோ விதமான விளக்கங்களை எழுதி விட்டார்கள். அவை அனைத்திலும் ஒன்று கூட அம்மாவை இகழ்ந்து கூறப்பட்டது அல்ல. ஏனென்றால் எல்லோருடைய அம்மாவும் அப்படித்தான். தன்னுடைய அம்மா வேசியாக இருந்தாலும் பிள்ளைக்கு அவள் அம்மா மட்டுமே. அவளுடைய அன்பு அவ்வளவு பரிசுத்தமானது.

ஆனால் அந்த அம்மா என்ற வார்த்தையின் மறுபக்கத்தை ஆழமாக ஆராய்ந்தால் அது பல கெட்ட குணங்களின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எல்லா மனிதர்களும் அம்மாவை அம்மாவாகவே, கண்ணால் காணக்கூடிய தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆனால் எல்லா அம்மாக்களும் எல்லா குழந்தைகளையும் குழந்தைகளாக பார்ப்பதில்லை.

மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு வரும் தன்னுடைய மகனை வீட்டிலிருக்கும் அனைவரும் வசைபாட அம்மா மட்டும் “நாசமா போன மழை, கொஞ்சம் நேரம் கழித்து பெய்ய கூடாதா? என் பையன் வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு” என்று மழையை வசை பாடுகிறார். இதுதான் தாயின் அன்பு. ஆனால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரம் கைக்குழந்தையுடன் நிற்கும் ஒரு அம்மாவுக்கு சீட்டிலே உட்கார்ந்து இருக்கும் எத்தனை அம்மாக்கள் இடம் தருகிறார்கள். நடைமுறையில் அப்படி சீட் தருவது ஒரு அப்பாவாகவே இருக்கும்.

அம்மா அம்மாவாக நடந்து கொள்வது அவளுடைய குழந்தைகளுக்கு மட்டுமே, மற்ற குழந்தைகளுக்கு அவள் குறைந்தபட்சம் ஒரு மனுஷியாக கூட நடந்துகொள்வதில்லை. எல்லா குழந்தைகளையும் குழந்தைகளாக மதிக்கும் மனோபாவம் அந்த அம்மாவுக்கு இருப்பதில்லை.

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் ரெயிலின் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் தன்னுடைய பிள்ளைக்கு மட்டும் படுத்து உறங்கும் அளவாவது இடம் வேண்டும் பக்கத்து சீட் குழந்தை உட்கார கூட சீட் இல்லாமல் நின்றால் கூட பரவாயில்லை என்ற மனோபாவத்தில் இருக்கும் நிறைய அம்மாக்களை நீங்கள் அங்கே பார்க்கலாம்.

எல்லா அம்மாக்களுக்கும் பிள்ளைக்கள் உண்டு. அவர்கள் மேல் நிறைய பாசம் உண்டு. அவர்களுக்காக அதிக நேரம் உழைக்கும் ஆர்வம் உண்டு. அவர்கள் வாழ்க்கைக்காக தனது சிறுநீரகத்தில் ஒன்றை விற்றுத் தரக்கூடிய தியாகம் கொண்ட மனப்பான்மை உண்டு. அவனுக்கு பிடித்த வாழ்க்கைக்காக அவனது காதலி கேட்ட தனது இதயத்தை வெட்டி தரும் நல்ல இதயம் கூட உண்டு. ஆனால்…….

தன்னுடைய குழந்தையை அடித்து விட்டது பக்கத்து வீட்டு குழந்தையை குழந்தை என்றும் பாராமல் அடித்து நொறுக்கும் மூர்க்கத்தனம் அம்மாக்களுக்கு மட்டுமே உண்டு.

இத்தனை ஆண்டுகளாக தன் பின்னால் மட்டுமே சுற்றி வந்த மகன் இப்போது மருமகள் சொல்வதையும் கேட்கிறானே என்ற விரக்தி மனப்பான்மையில் மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியார்களும் அம்மாக்களின் மறு உருவமே. காரணம் தனது மகன் தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்ற குறுகிய எண்ணம். இந்த அம்மா தனது பிள்ளைக்கு மட்டும் தான் அம்மா, அவனுக்கு துணையாக வந்தவளுக்கு அல்ல. நாளைக்கு அவளும் அப்படியே.

உயிரை பணயம் வைத்து செய்யும் எத்தனையோ வேலைகளில் அதுவரை தனது கணவன் எத்தனையோ முறை செய்யச் செல்லும் போதெல்லாம் கண்ணீர் விடாத அந்த ஆண்மகனின் மனைவி நாளை அதே வேலையை அடுத்த வாரிசாக அவளது பிள்ளை செய்ய நேரும் போது குடம் குடமாக கண்ணீர் விட்டு உண்மையான அம்மாவாக மாறும் சுயநலமிக்க அம்மக்களும் அம்மாக்களே.

அம்மாக்களை பற்றி வள்ளுவர் சொல்கிறார்.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

என்று. அதாவது தனது மக்கள் கைகளால் அளாவிய கூழ் மட்டுமே அமிழ்தை விடச் சிறந்த்தது என்கிறார். அவர் கூட பொதுவாக “சிறுகை அளாவிய கூழ்” என்று கூறவில்லை.

ஆனால் உலகெலாம் சுற்றி வந்து எல்லா மக்களுக்கும் அம்மாவாக, ஒரு சுயநலமில்லாத தோழியாக, கஷ்டத்திலிருப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு மகா மனிதராக விளங்கிய தெரசாவை வேறு ஏதாவது புனிதமான பெயர் கொண்டு அழைக்காமல் இந்த உலகம் வெறுமனே அம்மா என்ற பெயர் கொண்டு அழைத்தது சற்றே அவரை சிறுமைப்படுத்தியது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அம்மா என்ற பெயரின் பின்னால் வரும் இத்தனை கெட்ட குணாதிசயங்கள் அவருக்குள் இருந்த்து இல்லை.

அம்மா ஒரு 22 காரட் தங்கம்தான், ஆனால் அதிலே கூட கொஞ்சம் மாசு கலந்துள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக