புதன், 30 செப்டம்பர், 2015

இந்தியா ஒரு வேலைக்கார நாடு

“மக்களை நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செய்ய வேண்டுமானால், அவர்கள் தம்முடைய சொந்த அறிவைப் பெற்றிருக்க கூடாது”

இது தான் ஒரு நாட்டை அடிமைப்படுத்த ஒரு ஆட்சியாளன் செய்ய வேண்டியது. நம்மை ஆட்சி செய்ய வந்த போது ஆங்கிலேயர்கள் இதைத்தான் செய்தார்கள். இப்போது நம்முடைய ஆட்சியாளர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.

பூரண அறிவை நடைமுறை வடிவில் வழங்கிய குரு-சிஷ்ய உறவு முறையிலான கல்வியை அழித்து தற்போது இருக்கும் கல்விமுறையை புகுத்தியவர்கள் அந்த ஆங்கிலேயர்கள்.

நன்றாகப் பாருங்கள்...

நமது கல்வி நமக்கு எதைக் கற்றுத் தருகிறது?

நாம் எதற்காக பள்ளிக்கு, கல்லூரிக்குப் போகிறோம்?

ஏதோ ஒரு வேலையைக் கற்றுக் கொள்வதற்காகத்தானே...

இந்த இந்தியக் கல்வி, மன்னிக்கவும்.. ஆங்கிலேயக்கல்வி பொறியாளன், மருத்துவன் என்று வேலைக்காரர்களைத்தானே உருவாக்குகிறது. எந்த மனிதனாவது தான் தெரிந்து கொண்ட வேலையைத் தவிர வேறு வேலையைக் கொடுத்தால் செய்யத் தயாராக இருக்கின்றானா? இல்லை அப்படித் தயாராக இருந்தாலும் இந்த சமுதாயம் அவனை செய்ய விடுகிறதா?

குறைந்த பட்சம் எந்த வேலையையும் தன்னால் செய்ய முடியும் என்ற தைரியத்தையாவது இந்தக் கல்வி அளித்திருக்கிறதா?

இந்தியன் இன்று எல்லா நாடுகளிலும் இருக்கிறான் என்று பெருமையுடன் பீத்திக் கொள்ளும் நாம் அங்கே என்னவாக இருக்கிறான் என்பதைப் பார்ப்பதில்லையே..

பில்கேட்ஸின் நிறுவனத்தில் ஏகப்பட்ட பொறியாளர்கள், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் நமது மருத்துவர்கள், அரபு நாடுகளில் நமது கட்டிடப் பொறியாளர்கள், சிங்கப்பூரில் நமது ஆட்கள் என எல்லா நாட்டிலும் நமது இந்தியர்கள் இருக்கிறார்கள் வேலைக்காரர்களாக மட்டும்..

நமது நாட்டில் கூட இன்னும் பலர் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும் என்றுதானே கற்பிக்கப்படுகிறார்கள் அவர்களது பெற்றோர்களால் மற்றும் ஆசிரியர்களால் மற்றும் சமுதாயத்தால்.

ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு பெரிய வேலையில் சேர வேண்டும் என்று எண்ணாமல் தான் பத்து பேருக்கு வேலை அளிக்க கூடிய நிலைக்கு வர வேண்டும் என்று எண்ண வேண்டும். அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப் படாவிட்டால் இந்தியா என்றும் ஒரு திறமையான வேலைக்கார நாடாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக