வியாழன், 1 அக்டோபர், 2015

எது பெண்ணியம்?

பெண்ணுக்கு உரிமை வேண்டும்; பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும்; பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும்; இதுதான் இன்றைய பெண்ணிய வாதிகளின் போக்கு. இதையே வேறு விதமாக சொன்னால், பெண்கள் எல்லாம் ஆண்களுக்கு நிகராக வர வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசை. அதற்காக அவர்கள் ஆண்களைப் போலவே உடை அணிவார்கள், ஆண்கள் செய்யும் எல்லா வேலையும் செய்வார்கள், ஆண்கள் இருக்கும் எல்லா துறைகளிலும் கால் பதிப்பார்கள்.

ஆண்களைப் போல இருக்க வேண்டும் என்ற போக்கில் அவர்கள் ஆணாகவே மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெண்ணாக இருப்பதை மறந்து கொண்டு வருகின்றார்கள். எல்லா பெண்களும் ஆண்களைப் போல ஆக வேண்டும் என்று எண்ணுவது பெண்மைக்கு பெருமை தரும் செயலா? இல்லை, ஆண்மைக்குப் பெருமை தரும் செயலா? நீங்களே மறைமுகமாக பெண்ணடிமைத்தனத்திற்கு வழிவகை செய்கிறீர்களே.

பெண்மைக்கு மேன்மை செய்யப் போகிறேன் என்ற பெயரில் நீங்களே ஆண்மைத்தனத்தை விரும்பி உங்களைப் போன்ற பெண்களை பலவீனப்படுத்துவது எப்படி பெண்மையை வலுப்படுத்தும்? பெண்மையை மேன்மைப் படுத்த பெண்மைகளையெல்லாம் ஆண்மையாக்கினால் அது எப்படி பெண்மைக்கு வலு சேர்க்கும்.

பெண்மையை மேன்மைப்படுத்த செய்யும் செயல் சில கரடுமுரடான ஆண்மையைப் பதப்படுத்தி அதை பெண்மையாக்குவதில் அல்லவா இருக்க வேண்டும். கரடுமுரடான ஒரு காட்டுமிராண்டி மனிதன் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியதும் கவிதை எழுதத் தொடங்கி, காடுமலைகளை வர்ணித்து, கடவுளில் முடிக்கிறானே அங்கே அல்லவா இருக்கிறது பெண்மையின் வெற்றி; பெண்மையின் மேன்மை. இந்த உலகில் பெண்மையை சாகடிப்பதில் ஆண்களை விட பெண்களே முன்னிலையில் நிற்கிறார்கள். ஆனால் அதற்கு பெண்மையை வளர செய்கிறோம் என்று பெயர் வேறு கொடுத்துவிடுகிறார்கள்.

ஆலமரத்தைப் பார்த்து அருகம்புல் தானும் ஆலமரத்தைப் போல் வரவேண்டும் என ஆண்டவனைப் பிரார்த்தனை செய்தது. இதிலே பெருமை ஆலமரத்திற்கா? அருகம்புல்லுக்கா? நான் ஆலமரத்தை பெருமை என்றோ அருகம்புல்லை சிறுமை என்றோ கூறவில்லை. இரண்டிற்கும் அதற்குரிய பெருமை இருக்கிறது என்று கூறுகிறேன். அருகம்புல்லுக்கு என்று ஒரு அழகு, நளினம் இயற்கையிலேயே இருக்கிறது. ஆனால் அது ஆலமரமாக ஆசைப்பட்டு பிரார்த்திக்க ஆரம்பித்த போதே அதைவிட்டு போய்விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக