வியாழன், 15 அக்டோபர், 2015

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

இந்த பழமொழி கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள் என்பதற்காக சொல்லப்பட்டது. சரியாக என்பதன் அர்த்தம் கிடைக்கும் நேரத்திலேயே பயன்படுத்திக்கொள் என்பதாகும். ஆனால் நம்மவர்கள் தனது சுய நலத்தை நியாயப்படுத்துவதற்காக மட்டுமே இந்த பழமொழியை பயன்படுத்துகிறார்கள்.

காற்றுள்ளபோதே நெல்லைத் தூற்றுவதால் ஒருவனுக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் அதில் யாருக்கும் எந்த கெடுதியும் இல்லை. இந்த பழமொழியை மனிதர்கள் தன்னுடைய விசயத்தில் தன்னுடைய லாபத்திற்காக பயன்படுத்தும் மனிதர்கள் அதனால் மற்றவருக்கு நஷ்டம் உண்டாகிறதா இல்லையா என்பதைக் கூட சிந்திப்பதில்லை.

இது ஒருவகை சுய நலம். ஜப்பானில் சுனாமி வந்தபோது நிகழ்ந்த ஒரு சில சம்பவங்கள். அந்த நாட்டின் வியாபாரிகள் மிகக்குறைந்த விலையில் பொருட்களை சுனாமி தாக்கிய இடங்களுக்கு வினியோகம் செய்தனர். அதே நேரம் இரவு வேளையில் கூட உணவு வினியோகம் செய்யும் இடங்களில் மின்சாரம் தடைபட்டு போனால் எந்த மனிதனும் எதையும் திருடிச்செல்லவில்லை. இது ஜப்பானிய மக்களின் உன்னத மனோ நிலை. இதே நிலை நமது நாட்டில் நடக்கும் போது நமது வியாபாரிகள் உணவுப்பொருட்களை கூட இரண்டு மூன்று மடங்கு விலையில் விற்பனை செய்தார்கள். ஏன்? ஒரு புரோட்டா விலை 120 ரூபாய்க்கு விற்ற நேரங்கள் கூட உண்டு. இது வியாபாரிகள் புரிந்து கொண்ட காற்று. அப்போது அவர்கள் தூற்றிக்கொண்டார்கள்.

இதே கடைகளில் மின்சாரம் தடைபட்டு போனால், மக்கள் சந்தர்ப்பம் வாய்த்ததென்று எண்ணி திருட ஆரம்பித்தார்கள். அது அவர்கள் புரிந்து கொண்ட காற்று. அவர்கள் அப்போது தூற்றிகொண்டார்கள். இம்மாதிரி சுய நலமாகவே இப்பழமொழி புரிந்துகொள்ளப்பட்டது. யாரைக் குறை கூற முடியும். வியாபாரிகளை மக்களும், மக்களை வியாபாரிகளும் குறை கூறலாம். ஆனால் இரண்டுமே தவறுதான். அல்லது இரண்டுமே சரிதான்.

பொங்கல், தீபாவளி போன்ற சமயங்களில் இந்த செல்போன் நிறுவனங்கள் எடுக்கும் பிச்சை இருக்கிறதே. அந்தந்த விஷேச நாட்களில் மட்டும் அவர்கள் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் பணம்பார்க்க தொடங்கி விடுகிறார்கள்.

பழங்காலத்தில் வியாபாரம் பண்டமாற்று முறையாக இருந்தபோது, அதன் நோக்கம் இருவரும் பயன்பெறுவதாக இருந்தது. ஆனால் இன்று பணம் சேர்ப்பது ஒன்றே நன்மை என்றாகி விட்டது. பொருளில்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்றுதான் கூறினார்களே ஒழிய பொருள் சேர்ப்பது மட்டுமே இவ்வுலகின் நோக்கம் என்று கூறவில்லை.

பெருவாரியான மக்கள் பொருள் சேர்க்க கிடைக்கும் வாய்ப்புக்காக இந்த பழமொழியை பயன்படுத்தும் போது, வேறு சிலரோ சக்தியை பெற, உயர் அந்தஸ்தை பெற, தனது இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள என அடுத்தவனுக்கு குழிபறிப்பதற்கு தனக்கும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தும் போது இதை பயன்படுத்திகொள்கிறார்கள்.

அந்த சமயங்களில் இவர்கள் “எது பலமானதோ அதுவே வெற்றி பெறுகிறது” என்ற டார்வின் தத்துவத்தையும் தனக்கு ஆதரவாக ஆக்கி கொள்கிறார்கள். இதே காரியத்தை அடுத்தவர் செய்து தனக்கு கிடைக்கும் லாபத்தை தட்டிப்பறித்துவிட்டால், அந்த வேளையில் மட்டும் சட்டத்தை பற்றியும், நியாயத்தை பற்றியும் பேச ஆரம்பித்து விடுவான்.

அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி. தனக்கு வந்தால் அது ரத்தம்.

ரேஷன் கடை வரிசையில் இடையில் புகுந்து கொள்வது. லஞ்சம் கொடுத்து வேலைக்கு செல்வது என எல்லாமே இம்மாதிரி சந்தர்ப்பத்தை சுய நலமாகப் பயன்படுத்தும் வேலைகள் தான்.

மனிதன் தன்னுடைய புத்தி மற்றும் சூழ் நிலையைக் கொண்டே அர்த்ததை புரிந்து கொள்கிறான். மழை வரும் நேரத்தில் விவசாயி நல்லது என்கிறான். அனால் மிளகாய் வத்தல் வியாபாரி பதைபதைக்கிறான். இதில் மழையின் குற்றம் என்ன? அது போல எல்லா மனிதனும் தன்னை குறித்து மட்டுமே சிந்த்தித்து சிந்தித்து இந்த பழமொழி வெறும் சுய நலத்திற்கான பயன்பாடாகிப்போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக