திங்கள், 19 அக்டோபர், 2015

தவறான பாடம்; சரியான குழந்தைகள்;

“நம்ம நாடு இன்னும் முன்னேறாம இருக்கிறதுக்கு காரணம் இந்த வாத்தியார் தொழில் கெட்டுப்போனதுதான்”

இந்த வார்த்தைகளை பெரிய மனிதர்கள் யாரும் சொல்லியிருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் என்னுடைய ஆசிரிய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஏனென்றால் அதிலே எவ்வளவு உண்மை இருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.

நாம் பள்ளியில் படித்த பாடங்களில் கூட பல தவறானவை என்று நமக்கு பின்னாளில் தெரிய வர வாய்ப்பிருக்கிறது. அது நாம் எப்பொழுதும் ஆராய்ச்சி நோக்குடன் எதையாவது கற்று கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் ஜாக்ஸன் துரைக்கெதிராக வீராவேசத்துடன் தமிழில் வசனம் பேசுவதாக பள்ளியில் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழே சரியாகப்பேசவராது என்று சில நாட்கள் முன்பு வேறொரு நூல் மூலமாக தெரிந்து கொண்டேன்.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று பள்ளியில் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. ஆனால் கொலம்பஸ் அமெரிக்கா என்ற நிலப்பகுதியை அடையும் முன்னரே அங்கே பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இப்படி இருக்க கொலம்பஸ்தான் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்பது எப்படி சரியாகும். அமெரிக்காவுக்கான கடல் வழிப்பாதையைக் கண்டுபிடித்தார் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்.

சமீபத்தில் சி.பி.எஸ்.ஈ பள்ளி பாடப்புத்தகத்தில் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி தவறான வரலாற்றுத்தகவல்கள் தரப்பட்டுள்ளது என்று அச்சமுதாய மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கல்லணையை கட்டியது கரிகாலன் என்று பாடம் சொல்லித்தரப்பட்டிருக்கிறது ஆனால் கல்லணையை கரிகாலன் தான் கட்டினான் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கபெறவில்லை என்றும் அது குறித்த ஆதாரங்கள் எதுவும் அந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல்களில் இல்லை என்றும் சில நாட்கள் முன்பு ஒரு வாரப்பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்த நிகழ்வுகளெல்லாம் இப்படி நடந்தன என்று நமக்கு கற்பிக்கபட்டுள்ளது. ஆனால் இவை இப்படியெல்லாம் நடக்கவில்லை என்று இந்த கட்டுரை ஆணித்தரமாக கூறாவிட்டாலும் அவை அப்படித்தான் நடந்தன என்பதை அவர்களால் ஆணித்தரமாக கூற முடியாது என்பதை உறுதியாகச் சொல்லும்.

இப்படியாக தவறான தகவல்களையோ அல்லது இதுதான் சரியென்று தெளிவாக முடிவு செய்யப்படாத தகவல்களையோ பாடத்திட்டத்தில் வைத்து அதை வளரும் தலைமுறைக்குக் கற்பித்தால் நமது உண்மையான வரலாறு என்பது வெறுமனே ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ஆராய்ச்சிக் குறிப்புகளாகி விடுமல்லவா?

இதைவிட இந்த மாதிரியான கருத்துகளை “சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்ததாக சொல்லப்படுகிறது” , “ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது” என்று அறுதியிட்டு கூறமுடியாததைப்போல சொல்லித்தந்தாலவது அந்த குழந்தைகள் வளரும்போதாவது, நமக்குத் தரப்பட்ட தகவல் சந்தேகத்திற்கிடமானது என்றால் சரியானது எது? என்று தேடித் தெரிந்து கொள்ளும்.

ஏற்கனவே நமது கல்வி முறையின் மீதும் கற்பிக்கும் முறைகள் மீதும் ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் இருக்கும் போது கற்பிக்கப்படும் பாடங்கள் இப்படி இருந்தால் வருங்காலம் என்ன ஆகும்? எதையும் பாராமல் இப்படி தவறான தகவலை பாடமாகத்தருவதால் வளரும் தலைமுறைக்கு என்ன பயன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக