சனி, 3 அக்டோபர், 2015

யார் இழிவான பிறவி?

ஹிட்லர் மிகவும் மிருகத்தனமானவன். முசோலினி ஒரு காட்டுமிராண்டி என்றெல்லாம் மிக மோசமான குணாதிசயங்களை குறிப்பிடுவதற்கு மட்டுமே விலங்குகளைப் பயன்படுத்தி பழகிவிட்டான் மனிதன் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் இவன். உண்மையில் மனிதனை விட கேவலமான செயல்களை மிருகங்கள் செய்ததாக வரலாறு இல்லை.

சிங்கத்தையும் புலியையும் கொடூரமான விலங்கு என்று கூறுகின்ற மனிதன் எத்தனை கொடூரமானவன் என்று சற்று சிந்திந்துப் பார்த்தால் மட்டுமே புரியும்.

அவை அனைத்தும் பசி இல்லாத போது ஒரு போதும் மற்ற மிருகத்தை கொல்வதில்லை. ஆனால் இவன் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை வேட்டையாடுகிறான். வீர விளையாட்டு என்ற பெயரில் விலங்குகளை தேவையில்லாமல் துன்புறுத்துகிறான். இந்த மாதிரி காரியங்களை மிருகங்கள் ஒரு போதும் செய்வதில்லை.

மிருகங்களின் இடமான காட்டுக்குள் இவன் செல்வதும், அங்கு அவைகளை கொல்வதும் வீரதீர சாகசம். ஆனால் அவை மனிதனான இவனது இடமான நாட்டுக்குள் வந்து விட்டாலோ அதற்குப் பெயர் “அத்துமீறல்”. இதைச் சொல்வது இவனது சட்டம். தர்மம்.

இதேபோல், சாதாரணமாக தெருவில் நீங்கள் போகும் போது ஒரு நாய் அடிபட்டு இறந்து கிடப்பதை பார்க்க முடியும். ஆனால் ஒரு கோழியோ, ஆடோ, மாடோ இறந்து கிடப்பதை பார்க்க முடியாது.

அதே நேரம், தன்னுடைய வண்டியில் ஒரு கோழியோ, ஆடோ அகப்பட நேர்ந்தால் வண்டியை நிறுத்தும் வாகன ஓட்டுனர்கள் நாய்கள் அடிபட நேர்ந்தால் வண்டியை நிறுத்துவதில்லை. ஏனெனில் கோழிக்காக ஒரு 200 ரூபாய் அவர்கள் அபராதம் கட்ட நேரிடும். ஆட்டுக்காக சில ஆயிரங்கள் வரை கூட அபராதம் கட்ட நேரிடும். அதே நேரம் எந்த நாய்க்காகவும் எந்த எஜமான நாயும் வக்காலத்து வாங்க வருவதில்லை.

நன்றி கெட்ட மனிதர்களை திட்டும் போது “நன்றி கெட்ட நாயே” என்று திட்டும் மனிதன் நன்றி உள்ள மனிதனை பாராட்ட “நாய்” என்ற பதத்தை என்றாவது பயன்படுத்தி இருக்கின்றானா? இல்லை அப்படிப் பயன்படுத்தினால் முகம் சுழிக்காமல் ஏற்றுக்கொள்பவர்தான் எத்தனை பேர்?

தன்னுடைய எஜமான்னுக்காக உயிரையே பணயம் வைக்கும் நாய்களுக்காக கொஞ்சம் கூட வருத்தப்படாத இவன் எவ்வளவு தூரம் நன்றி கெட்டவன்.

இங்கே யார் இழிவான பிறவி? மிருகங்களா...இல்லை இவனா?

2 கருத்துகள்: