வெள்ளி, 9 அக்டோபர், 2015

பெண்களும் ஆடைக்கட்டுப்பாடும்

பெண்களையும் அவர்களுடைய ஆடைகளையும் பற்றி இதுவரை நீங்கள் நிறையப் பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். அவை அனைத்தும் பெரும்பாலும் ஏதாவது ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட காலத்தில் உங்களுக்கு வந்த ஒரு கட்டுரையாக இருக்கும். ஒரு பெண்ணாக இருந்தாலோ இல்லை ஒரு பெண்ணிய வாதியாக இருந்தாலோ, இந்தக் கட்டுரையை படித்து முடித்ததும் நான் ஒரு ஆணாதிக்க வாதி என்று நீங்கள் கண்டிப்பாக எண்ணுவீர்கள் நீங்க்ள்

சரி, இந்த ஆடை விசயத்தில் இந்த பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?. இதைப் பற்றி ஏற்கனவே வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன.

ஆணாதிக்க மனம் கொண்ட பலர் பேசும் பேச்சு அவளுடைய ஆடை சரியில்லாத காரணத்தால் மட்டுமே அவள் கற்பழிக்கப்பட்டாள் என்பது. அதற்கு பெண்ணிய வாதிகளின் பதில் “அவளுடைய ஆடை விசயத்தில் தலையிட நீ யார்?” என்பது. அது ஆணாதிக்கம் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என எண்ணும் இதைப் பெண்ணாதிக்கம் என்பது சரியா? இல்லை பெண்ணியம் என்பது சரியா?

எப்படி வேண்டுமானாலும் இருக்க இந்த உலகம் ஒன்றும் உங்கள் வீட்டு குளியலறை அல்ல. இங்கே பலவற்றையும் பலரும் பார்த்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது.

நீங்கள் கேட்கலாம், கவர்ச்சியாக ஆடையணியாத பெண்கள் கூட கற்பழிக்கப் படுகின்றனரே என்று? அதற்கு என்னுடைய பதில்…

புகைப்பிடித்தல் புற்றுநோய் வரும் என்று நான் கூறினால், புகைப்பிடிக்காதவருக்குக் கூட புற்றுநோய் வருகிறதே என்று நீங்கள் கேட்பதைப் போன்றது. இது உங்கள் உரிமையைக் கேட்பதாகாது. விதண்டாவாதம் செய்வதைப் போன்றது.

இவர்கள் சுதந்திரம் என்று நினைத்து ஒரு நல்ல மனிதனுக்கு தேவையான ஒழுக்கத்தை துறந்துவிட்டார்கள். நீங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே கட்டுப்படுத்த முடியாதவாறு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு பெண்ணுக்கு எந்த ஆடை சரியானது என்பதை யாரும் கூற முடியாது. ஏனெனில் எல்லா ஆடைகளும் அவர்கள் உடுத்தும் விதத்தில் அழகாகவோ, அசிங்கமாகவோ தோன்ற முடியும்.

நீங்கள் கூறலாம், சேலை கவர்ச்சியற்றது என்று. சினிமாவைப் பாருங்கள். காமாட்சியம்மனும், கவர்ச்சிக்கன்னியும் ஒரே நேரத்தில் வேறு வேறு சேனல்களில் வந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சில நாட்கள் கழித்து காமாட்சியம்மன் கவர்ச்சிக்கன்னியாகவும், கவர்ச்சிக்கன்னி காமாட்சியம்மனாகவும் வருவார்கள். யாரைக்குற்றம் சொல்வது? ஆடையைச் சொல்வதா? இல்லை, ஆடையணிந்தவளைச் சொல்வதா? இல்லை, அதைப் பார்ப்பவர்களைச் சொல்வதா?

எல்லோரையும் கூற முடியும்.

நம்முடைய தொழிலுக்கேற்ப, நமது வசதிக்கேற்ப நாம் எந்த ஆடையையும் அணியலாம் என்றால் அது மற்றவரை உறுத்தாததாக, நாகரிகமானதாக இருக்க வேண்டும். ஆடையில்லாத மனிதன் இலைதழைகளை ஆடையாகச் செய்து உடுத்தினான். அன்று நாகரிகம் பிறந்தது. ஆனால் இன்று அரைகுறை ஆடையோடு திரிவதுதான் நாகரிகம் என்றும், பெண்சுதந்திரம் என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது.

பெண்களே, ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் கற்பழிப்புகளுக்கு காரணம் ஆடைகள்தான் உடுத்தும் விதம்தான் என்று கூறவில்லை. ஆடை உடுத்தும் விதமும் ஒரு காரணம் என்றுதான் கூறுகிறேன். ஆடைகளே இல்லாத பழங்குடி இனத்திலும், ஆதிமனிதன் வேட்டைச்சமூகமாக வாழ்ந்த காலங்களிலும் கற்பழிப்பு என்ற வார்த்தை கூடக் கிடையாது.

தன்னைக் கவர்ச்சியாகக் காட்டிக்கொள்ள நினைக்காத, உடலை முழுவதும் மூடிய ஆடைகள் அணிகின்ற சமுதாயத்திலும் கற்பழிப்புகள் அதிகம் நடப்பதில்லை. “என்னிடம் ஏதோ இருக்கிறது, ஆனால் அதை நான் உனக்குத் தெரியும் படியாக மறைத்து வைப்பேன்” என்பது போன்ற மனோபாவம் கொண்ட சமுதாயத்தில் தான் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக