வெள்ளி, 13 நவம்பர், 2015

காதலுக்கு எதிரி யார்?

முதல் எதிரி பெற்றோர்கள்.

இரண்டாவது எதிரி கலாச்சாரம்

அடுத்து சாதி, மதம், பொருளாதார வேறுபாடுகள் என கண்ணுக்கு தெரியாத பல பலமான எதிரிகள். இவைகள் தான் காலம் காலமாக காதலுக்கு எதிரிகள் என்று சொல்லபட்டு வருகின்றன. ஆனால் காதலுக்கு இருக்கும் மிக முக்கியமான எதிரியை இந்த காதலர்கள் மறந்து விடுகிறார்கள். அந்த எதிரிக்கு பிறகுதான் மற்ற எதிரிகள் என்பதையும் கவனிக்க தவறிவிடுகிறார்கள்.

 அது யார்? அந்த காதலர்களேதான்.

காதல் என்ற பெயரில் கண்ட கண்ட கருமத்தையெல்லாம் ஒரு தலைமுறைக் காதலர்கள் செய்யும் போது அடுத்த தலைமுறை உண்மையாகவே காதலித்தாலும் காதல் என்ற வார்த்தையை கேட்கும் சமூகத்திற்கு அது கெட்ட வார்த்தையாகவே தெரியும்.

“இந்த உலகில் இன்னொரு உண்மையான காதல் பிறக்கும் வரை நான் ஒரு உலக அதிசயமாகத்தான் இருப்பேன் – இப்படிக்கு தாஜ்மகால்” என்றொரு கவிஞன் எழுதினான். அதை போல இங்கே காதலில் உண்மை இல்லை, தியாகம் இல்லை, நம்பிக்கை இல்லை, சகிப்புதன்மை இல்லை இவ்வளவு ஏன், இங்கே காதலிலே காதலே இல்லை.

எல்லாம் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. கொஞ்ச நாள் பழகுகிறார்கள்; பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள்; அவரவர் காசாக இருந்தாலும் பெற்றோர் அனுப்பி வைத்த காசாக இருந்தாலும் நன்றாக ஒன்றாக செலவழிக்கிறார்கள்; பிறகு படிப்பு, வேலை காரணமாக வேற்று ஊருக்கு செல்ல நேரும் போது பரஸ்பரம் கை குலுக்கி விட்டு பிரிந்து விடுகிறார்கள்; கேட்டால் அதை அப்போது நட்பு என்ற சாயத்தில் வர்ணமிட்டு காட்டுவார்கள். இவர்கள் காதலை மட்டுமல்ல நட்பையும் கொச்சைபடுத்தி விடுவார்கள்.

இப்படியாக எந்தவித பற்றுதலோ உண்மையோ இல்லாமல் பொழுதுபோக்குக்கு காதலிப்பவர்கள் ஒரு ரகம் என்றால் காதல் என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் செய்பவர்கள் இரண்டாவது ரகம்.

காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த காதலை பொறுத்தவரை நூறு சதவீதம் முட்டாள்கள். அது மாற்ற முடியாதது. அவர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு சந்தோசமாக இருப்பார்கள். அதே நேரம் காதலிக்கப்படுபவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் அந்த காதலை வாழவைக்கவோ சாகடிக்காவோ செய்யும் திறமை அவர்களுக்கு தான் இருக்கிறது. பெரும்பாலும் அந்த பாக்கியசாலிகள் அந்த காதலை சாகடிக்கும் மனசாட்சியில்லாத அதிபுத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். அந்த புத்திசாலியின் காதலர் முட்டாள்தான். ஆனாலும் அந்த உலகில் உயர்ந்த முட்டாள்தனத்தை மதிக்கதெரியாத புத்திசாலி முட்டாள் இவர்கள். காதலிக்கபடுபவர்கள் மனசாட்சியில்லாதவர்கள், இதனால் பல காதல்கள் சாகடிக்கபடுகின்றன.

இப்படியெல்லாம் இல்லாமல் உண்மையாக காதலிப்பவர்களும், காதலித்தவரையே திருமணம் செய்து வாழ்பவர்களும் கூட செய்யும் மிகப்பெரிய தவறு கல்யாணம் முடிந்த கையோடு விவாகரத்து கேட்டு வக்கீல் வீட்டு வாசலையும் கோர்ட் வாசலையும் மிதிப்பதுதான்.

காரணம்……

காதலிக்கும் போது காதலரின் நல்ல குணங்களை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட இவர்கள் கல்யாணத்திற்கு பின் அவரின் கெட்ட குணங்களையும் பார்க்க நேர்வதுதான். அதை சகித்து கொள்ள அவர்களால் முடியவில்லை. இப்படியெல்லாம் காதலில் நடப்பதை பார்க்கும் மனிதரோ அல்லது சமுதாயமோ, யார்தான் தனது மகன் அல்லது மகள் காதலிப்பதை விரும்புவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் யார்? காதலர்களை தவிர வேறு எதையாவது காதலர்களால் காரணம் கூற முடியுமா?

ஆனால் இந்த காரணத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் காதலர்கள் எத்தனை பேர்?

1 கருத்து: