வெள்ளி, 27 நவம்பர், 2015

நியாயங்கள் கெடும் நேரம்

நியாயங்களும், தர்மமும் எப்போது கெடுகின்றன என்று பார்த்தால் அதற்கு சரியான விடை கிடைக்காது. ஏனெனில் துப்பாக்கியிலிருந்து குண்டு வெளிப்படுவதைப் போன்று ஒரு கணப்பொழுதில் நியாயங்கள் கெடுவதில்லை. அது ஒரு கிரகணம் நிகழ்வதைப் போல படிப்படியாக நிகழ்கிறது.

முன்பெல்லாம் நீதியாளர்கள் நீதியை வழங்குமிட்தது சொந்த பந்தங்களுக்கோ தனது உயிருக்கோ முக்கியத்துவம் அளிக்காமல் நீதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் இப்போது தனது மகளுக்கோ அல்லது மனைவிக்கோ ஏதாவது கேடு நேர்ந்துவிடுமென்றால் உடனே தீர்ப்பை மாற்றி எழுதிவிடுகின்றார்கள். எல்லா நீதிபதிகளும் அப்படி செய்வதில்லை என்றாலும் முதலில் ஒன்று இரண்டாக இருப்பதே நாளை பலவாக பெருகுகின்றது. பின் ஒருநாள் அது மிகச்சாதாரணம் என்றாகி விடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் நன்றாக நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு மனிதன் குற்ற உணர்ச்சியேயில்லாமல் மிகச்சாதாரணமாக செய்யும் எந்த ஒரு குற்றமும் அல்லது ஒரு சமுதாயமே மிகச்சாதாரணமாக கருதும் எந்த ஒரு குற்றமும் முதலில் அதே இடத்தில் பெருங்குற்றமாக கருதப்பட்டவையே. மனிதன் தவறை குறித்த குற்றவுணர்விலிருந்து விடுபடும்போது அல்லது அதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளும்போது நியாயமும், ஒழுக்கமும் கெடுகின்றது.

எனது தந்தை பெண்பார்க்க சென்ற போது மது குடிப்பதை ஒரு குற்றமாக பார்த்தார்கள். நான் பெண்பார்க்க செல்லும் போது அப்பழக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்.

நான் பெண்பார்க்க செல்கின்ற போது விபச்சாரியுடன் தொடர்பு வைத்துகொள்வதை கேவலமாக பார்க்கிறார்கள். எனது மகன் பெண்பார்க்க செல்லும் போது அவன் பல விபச்சாரியுடன் தொடர்பு வைத்து கொண்டாலும் அதை மிக்ச்சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு சமூகம் குடிக்கு அடிமையாவது தவறு என்ற எண்ணத்திலிருந்து விபச்சாரிக்கு அடிமையாவது கூட தவறல்ல என்ற எண்ணத்திற்கு எந்த நொடியில் செல்கின்றது.?

அரசாங்கமே மதுக்கடைகளை தொடங்கி நடத்த ஆரம்பித்த கணத்திலா?

இல்லை மது குறைந்த விலையில் கிடைத்த போதிலா?

இல்லை வெளிநாடு சென்று வந்த நண்பர்கள் நாற்றம் தெரியாத மதுவை வாங்கித் தந்த நாளிலா?

எதுவும் இல்லை......

மனிதன் படிப்படியாக கெட்ட பழக்கங்களை பற்றிய எண்ணங்களின் மீதான கோபத்தை குறைத்துக் கொள்ளும் போது, உலகமே அப்பாதையில் தானே செல்கிறது என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும்போது, ஊரோடு ஒத்துவாழ் என பழமொழி பேசும்போது, என இம்மாதிரியான விசயங்களால் மட்டுமே நியாயம் கெடுகிறது.

1 கருத்து: