புதன், 16 டிசம்பர், 2015

தேவையான வரலாறு - 1

வரலாறு எப்போதும் வெற்றி பெற்றவனின் கரங்களாலேயே எழுதப்பட்டு வந்துள்ளது. அதனால் தான் அது வெற்றி பெற்றவனின் பெருமைகளைப் பற்றியும் அவன் செய்த போர்களைப் பற்றியும் மட்டுமே பேசுகிறது. “நாம வாழணும்னா எத்தனை பேரை வேணும்னாலும் அழிக்கலாம், யாரை வேணும்னாலும் கொல்லலாம்” என்பதுதான் வரலாற்றிலிருந்து மனிதன் கற்றுக்கொண்ட பாடம். அல்லது தன்னுடைய சுயநலத்தை நியாயப்படுத்த மனிதன் வரலாற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரம்.

தமிழக வரலாற்றைப் புரட்டினால் சேரன், சோழன், பாண்டியன், பல்லவர்கள், நாயக்கர்கள், களப்பிரர்கள் என எண்ணற்ற மன்னர் பரம்பரைகள் அவர்களுடைய வெற்றிகள், அதற்காக அவர்கள் செய்த போர்கள், இடையிடையே அவர்கள் ஆட்சியின் நன்மைகள் என நீள்கிறது.

இதே கதைதான் இந்திய வரலாற்றிலும். முதலில் நம் வட இந்திய மன்னர்களின் ஆட்சி அவர்களுக்கிடையிலான போர்கள். பின் மொகலாயர்களின் வருகை, ஆங்கிலேயர் வருகை, பின் நமது இந்திய தலைவர்களின் ஆட்சி என எல்லாவற்றிலுமே அழிவின் அடையாளங்களே நிரம்பி உள்ளன. மனிதனுக்கு அழிவைப் பற்றி கற்பித்த அளவுக்கு ஆக்கத்தைப் பற்றியோ, அமைதியைப் பற்றியோ வரலாறு கற்பிக்கவில்லை. அல்லது இவன் கற்றுக்கொள்ளவில்லை.

ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், செங்கிஸ்கான், ஔரங்க்சீப், ஷாஜகான், திப்புசுல்தான், பாபர், அக்பர், அசோகர், முகமது கஜினி, ராஜராஜசோழன், குலோத்துங்கசோழன், கட்டபொம்மன் இவர்களைப் பற்றியெல்லாம் மனிதனுக்கு வரலாற்றின் மூலம் நன்றாகத்தெரியும். அப்படியே தெரிந்த விசயங்களும் வெற்றி, போர், ஆட்சி பரப்பு போன்றவற்றை பற்றியதாகத்தான் இருக்கும்.

ஹிட்லர் மகா கொடுங்கோலன் என்று தெரியும் ஒருவனுக்கு அவன் ஒரு சிறந்த ஓவியன் என்பதோ, அல்லது அவன் ஒரு சைவ உணவுப்பிரியன் என்பதோ தெரியாது.

பள்ளிக்கூட்த்திலும், கல்லூரியிலும் மட்டுமே வரலாற்றைப் படித்தவர்களுக்கு கார்ல் மார்க்ஸ், ஜென்னி, ஹெலன் கெல்லர், காடிவா, கிருஷ்ணன், முகமது நபி, மோசஸ், கன்பூசியஸ், லாவோட்சு, டயோஜீனஸ் போன்றவர்களைப் பற்றியோ அவர்களுடைய குணாதிசயங்களைப் பற்ற்யோ, அவர்களுடைய வாழ்வைப் பற்றியோ தெரியாது.

ஏனெனில் வரலாறு இவர்களைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கற்றுத்தரவில்லை. மேலும் வரலாறு இவர்களின் வாழ்க்கையை வரலாறாகவே கருதவில்லை. கார்ல் மார்க்ஸ் ஒரு சமூக சீர்திருத்த வாதியாகவும், புரட்சிகாரனாகவும், கிருஷ்ணனும், முகமதுவும் ஒரு ஆன்மிகவாதியாகவும், கன்பூசியஸ் ஒரு ஞானியாகவும் மட்டுமே கருத்ப்பட்டனர்.

எந்த மாதிரியான வாழ்க்கைச் சூழலில் வாழ்கின்றானோ அதற்கேற்ற குணங்களோடு ஒருவன் வளர்வான் என்பது விஞ்ஞானம் நிரூபித்த உண்மை. இம்மாதிரி வரலாறுகளைப் படிக்கும் ஒருவன் ஆக்கபூர்வமான செயல்களை செய்வான் என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்.

மனிதனுக்கு இப்போது கிடைத்திருக்கும் வரலாற்றைவிட மிகவும் தேவையானது வேறு விதமான வரலாறாகும். ஆக்கபூர்வமான, அன்பு மயமான, அமைதி வாழ்வு வாழ்ந்த மனிதர்களின் வரலாறு காலாகாலத்துக்குமான வரலாற்றுத்தேவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக