செவ்வாய், 15 டிசம்பர், 2015

நாசமாகப் போகட்டும்.

கவிஞர் அப்துல் ரகுமானின் கட்டுரை ஒன்றில் கூறுகிறார், “மனிதன் தன் தாயையும், தந்தையையும் கொலை செய்து விட்டான். பின் தான் ஒரு அனாதை என்றும் தனக்கு ஆதரவு காட்டுங்கள் என்றும் மற்றவர்களிடம் வேண்டுகிறான்”.

இது எதைக்கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட்தென்று தெரியவில்லை. ஆனால் சமீபத்திய சென்னை வெள்ளத்தையும், மக்கள் அடிப்படை தேவைகளுக்காக பிச்சையெடுப்பதையும் பார்க்கும்போது மனிதன் பெரும் தவறு செய்த்தாகவே தோன்றுகிறது. இக்கட்டுரை இரக்கத்தை பற்றி பேசவேண்டிய நேரத்தில் நியாயத்தை பற்றி பேசுவதாக இதைப் படிப்பவனுக்கு தோன்றக்கூடும். அது உண்மைதான்.

உண்மை என்பது அனைத்திற்கும் ஆதாரம். அது ஆரம்பமும் ஆகும். முடிவும் ஆகும். இங்கே காட்டப்படும் இரக்கம் கூட வேஷமாகும். ஏனெனில் பெருவாரியான இரக்க உணர்வுகளுடன் கூடிய காரியங்கள் மனிதன் கஷ்டப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வுடனே செய்யப்படுகின்றன. இல்லையெனில் உதவுகின்ற மனிதர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு கிட்டாமல் போய்விடும்.

பத்திரிக்கை செய்திகளையும், நடக்கும் நிகழ்வுகளையும் பார்க்கும்போது எல்லாமனிதனும் நல்லவனாகி விட்டானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த நேரத்திலும் நடக்கும் நிகழ்வுகளை விமர்சனம் மட்டும் செய்வதால் என்னுடைய பார்வை துரியோதன்னுடைய பார்வையைப் போன்று அனைத்தையுமே தவறாகப் பார்க்கும் பார்வையோ என்றும் தோன்றுகிறது.

“சென்னைப் பேரழிவுக்கு காரணம் யார்?” என்றும், “விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்” என்றும், “அரசின் மெத்தனத்தாலேயே இந்த இழப்பு ஏற்பட்ட்து” என்றும், “செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்ட்தாலேயே அழிவு வந்த்து” என்றும் சில பத்திரிக்கைகளும், அரசியல் வாதிகளும் தன்னுடைய பத்திரிக்கை வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் பேசி வருகின்றனர்.

பேரழிவுக்கு காரணமாக அரசைக் குறை கூற வேண்டுமென்றால் அரசுதான் இந்த பெருமழையை உருவாக்கியதா? இல்லை இந்த சென்னையை உருவாக்கியதா? என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். அரசுதான் சென்னையை உருவாக்கியது எனில் எந்த அரசு சென்னையை உருவாக்கியது? தற்போதைய அரசா அல்லது இதற்கு முந்தைய அரசுகளா?. ஏதாவது ஒரு குறிப்பிட்ட அரசைக் குறை கூறினால் அந்த அரசின் ஆட்சியில்தான் சென்னை என்ற பெருநகரம் முழுவதும் உருவாக்கப்பட்டதா?.

விசாரணைக் கமிஷன் யாருக்கு அமைக்க வேண்டும். வருண பகவானுக்கா?. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து வேகமாக திறந்து விட்டதால் இழப்பு ஏற்பட்ட்து என்று குறை கூறுபவர்கள் மழை வெள்ளம் அதை உடைத்து விட்டால் சென்னைக்கு அழிவு குறைவாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறார்கள் போலும்.

தற்போதைய தமிழன் பெரும் மூடனும், பேராசைக்காரனுமாவான். வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுவிட்டு பிறகு குத்துதே, குடையுதே என்று அலறுகிறான். முட்டாள்களின் தேசத்தில் திருடர்களும், பேராசைக்காரர்களின் தேசத்தில் வியாபாரிகளும் சுகமாக வாழ்வார்கள். தமிழகம் அவ்வாறான ஒரு தேசமாகும்.

வீடு, முற்றம், வாசல், நடைபாதை, வீட்டின் பின்புறம், இரு பக்கங்கள் என எல்லா பகுதியிலும் தண்ணீரே பூமியினுள் புகாதவாறு சிமெண்ட் போட்டு பூசிவிட்டான். ஆறுகளை எல்லாம் ஆக்ரமித்து வீடு கட்டிவிட்டான். மணலையெல்லாம் கொள்ளையடித்துவிட்டான். அங்கிருந்த ம்ரங்களையெல்லாம் வெட்டிவிட்டான். ஏரிகளையும் மூடிவிட்டான்.

தன் சக்தியை வெளிப்படுத்தி இயற்கை ஆதாரங்களையும், அதன் குழந்தைகளையும் பாழ்படுத்திவிட்டான். இப்போது இயற்கை தன் சக்தியைக் காட்டும்போது அழிவுக்கு யாரைக் குறை கூறுவது என்று தேடுகிறான். தன் தாயையும் தந்தையையும் கொலை செய்து விட்டு, தன்மீது இரக்கம் காட்டச் சொல்லி நிற்பவனே இந்த மனிதனாவான்.

இப்போது தமிழகமெங்கும் உள்ள மனிதர்களெல்லாம் இவனுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னர் தமிழகத்தில் வேறு எங்காவது பேரழிவு நடந்தால் இந்த மனிதன் துளியும் உதவ மாட்டன். அத்தனை தூரம் சுயநல வாதியானவன் இந்த சென்னையின் நாகரீக மனிதன்.

இதையெல்லாம் பார்த்தால், “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்” என்றே பிரார்த்தனை செய்யத் தோன்றுகிறது.

1 கருத்து: