ஞாயிறு, 20 டிசம்பர், 2015

மனிதனும் இயற்கையும்

“இயற்கைக்கு பணம் என்றால் என்னவென்றே தெரியாது. பணம் இருந்தால்தான் வாழ்க்கை என்பது இயற்கையின் நியதியாக இருந்திருந்தால் பணம் மரத்தில் கொத்து கொத்தாக காய்த்து தொங்கிகொண்டிருக்கும். பணம் மனிதனின் கண்டுபிடிப்பு. பயனுள்ளதுதான். ஆனால் ஆபத்தானது.”

வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து விட்டுவிட்ட ஒரு ஞானியின் (ஓஷோ) வார்த்தைகள். அதாவது வாழ்ந்து விட்டுவிட்ட.. வாழும்போது முழுவதுமாக வாழ்ந்தார். பின் வாழ்க்கையை விடும் போதும் முழுவதுமாக விட்டுவிட்டார். அதுவே தைரியமான ஒரு மனிதனின் அடையாளம். ஆனால் இவ்வார்த்தைகளை கேட்கும் ஒரு சாதாரணமான மனிதன் அவரை பைத்தியம் என்றே கூறுவான். ஏனெனில் பணம் பயனுள்ளது ஆனால் அவசியமற்றது என்று கூறுகிறாரே.

பொதுவாக சாதாரண ம்னிதன் எவனும் ஒரு ஞானியின் வார்த்தைகளைக் கேட்டு சிரிக்கவே செய்வான். ஏனெனில் அவர் ஒரு ஞானி. அவருடைய வார்த்தைகள் சாதாரண ம்னிதனுக்கு புரிந்து விட்டால் அவர் ஞானியல்ல.

உண்மையில், இயற்கையாக படைக்கப்பட்ட விசயங்களை விட மனிதன் உருவாக்கிய எதுவும் உயர்ந்ததாக இருக்கவேயில்லை. இதை வாழ்வின் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். செயற்கையாக பெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்க தெரிந்த விஞ்ஞானத்தாலும் இயற்கையில் உள்ள சின்ன சின்ன விசயங்களை உருவாக்க இயலவில்லை. இதனை பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர், அவர்கள் நேர்மையாக மனிதர்களாக இருந்ததனால்.

தாகூர் ஒரு பிரசங்கத்திற்காக கவிதை ஒன்று எழுதினார். அப்போது இடையிடையே சில வரிகள் அவருக்கு சரியாக கிடைக்கவில்லை. எழுதாமல் விட்டு வைத்திருந்த வரிகளை ஏதாவது சில வார்த்தைக்ளை போட்டு பூர்த்தி செய்யுங்கள் என்று நண்பர் ஒருவர் கூறியவுடன் அவ்வாறே தாகூரும் செய்தார். பின் வாசித்து பார்க்கும்போது இவர் பூர்த்தி செய்தவை அனைத்தும் கன்றாவியாக இருந்தது.

கவிதை தானே உருவானது. அதிலே இவராக செருகிய இடைச்செருகல் கவிதையை அசிங்கமாக்கியது. இயற்கையில் உருவான ஒன்றுக்கு இணையாக ஒன்றை உருவாக்க தாகூர் போன்ற படைப்பாளிகளால் கூட முடியவில்லை. பின் மனிதன் உருவாக்கிய பணம் மட்டும் எப்படி சிறந்ததாக இருக்கும்.

இயற்கையில் அழகாக இருந்த பலவறறை மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் அசிங்கமானதாகவும், கொடூரமானதாகவும் மாற்றிவிட்டான். அப்படியே அந்த அசிங்கத்திற்கு பழகிய பின் இன்று அழகையெல்லாம் அசிங்கமென்றும், அசிங்கத்தையெல்லாம் அழகென்றும் கூறுகிறான். அல்லது இயற்கையின் அழகை வேறு பெயர்களில் புறக்கணிக்கின்றான்.

காதலியை மனைவியாக்கி விட்டான். உண்மையாக இருக்க வேண்டிய பெண்ணை, பெண்மையை நாகரிகம் என்ற் பெயரில் பொய்யான உயிராக்கிவிட்டான். காத்லுக்கு பதிலாக திருமணமும், நேசம் மற்றும் பிரியத்திற்கு பதிலாக அங்கீகாரம் மற்றும் தராதரமும், பண்டமாற்று முறைக்கு பதிலாக வியாபாரமும் இங்கே உருவாக்கப்பட்டுவிட்டன. இவையனத்தும் மனிதன் இயற்கையை அழித்து செயற்கையை உருவாக்கியதற்கான ஆதாரங்கள்.

செயற்கை கருத்தரிப்பு, செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை அரிசி, செயற்கை முட்டை, செயற்கை வீட்டு சாமான்கள், செயற்கை வாழ்க்கை முறைகள் என அனைத்திலுமே செயற்கை ஆட்சி செய்கின்றது. செயற்கை ஒரு வேளை பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் மிக மிக கேடானது. இயற்கைக்கு புறம்பானது. மேலும் இயற்கை சக்திக்கு முன் செயற்கையும், மனிதனும் ஒரு தூசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக