சனி, 2 ஜனவரி, 2016

தேவையான வரலாறு–2 (கிருஷ்ணன்)

கிருஷ்ணனின் வாழ்வு வரலாறா இல்லையா என்று யாராலும் அவ்வளவு எளிதாக பதில் கூறி விட முடியாது. ஏனெனில் கிருஷ்ணனின் வாழ்வை ஆன்மீகமாகவும், புனைகதையாகவுமே அனைவரும் சித்தரித்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி “கிருஷ்ணனின் வாழ்வும் மகாபாரதமும் வரலாறு அல்ல. அவை மதம் சம்பந்தபட்ட விசயங்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் என்பதைப் பற்றி மகாபாரதம் பேசவில்லை. ஆனால் ஆன்மாவில் என்றென்றைக்கும் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது” என்று கூறுகிறார்.

நமது இதிகாசங்களையும் அதன் வரலாற்று குழப்பங்களையும் கண்ட மாக்ஸ்முல்லர் என்ற ஆராய்ச்சியாளர், “இந்தியா தன்னுடைய வரலாற்றை எழுதுவதில் குறைவாகவே ஆர்வம் காட்டியுள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

விண்டர்நீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், “இந்தியாவில் மிகவும் வலிமையற்ற பகுதி என்பது இந்தியா வரலாறாகும்” என்கிறார். இவர்களெல்லாம் இவ்வாறு கூறக்காரணம் எந்த இதிகாசத்திலும் அது நடந்த வருடம் பற்றிய குறிப்புகளே இல்லை. வருடம் இல்லாத ஒன்றை வரலாறாக ஏற்க எவருக்கும் மனமில்லை.

பல்வேறு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கி.மு. 3000ஐ ஒட்டிய காலகட்ட்த்தை கிருஷ்ணனின் காலகட்டமாகவும், மகாபாரத யுத்தம் நடந்த காலகட்டமாகவும் கணித்திருந்தாலும் அவர்களுடைய கணக்கீடுகளுக்கிடையேயும் சில வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணனுடைய காலம் கி.மு. 3000ஐ ஒட்டியது என்பதில் மட்டும் அனைவரும் ஒத்துப்போகின்றனர்.

“மனிதன் என்னவாக பிறக்கிறான் என்பது முக்கியமில்லை. மனிதன் என்னவாக இறக்கிறான் என்பதே முக்கியம்” என்ற மேற்கோளுக்கிணங்க சிறைக்கூட்த்தில் அவதரித்தவன் கிருஷ்ணன். கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் வளர்ந்த அவன் சிறுபிள்ளைகள் செய்ய வேண்டிய சேட்டைகளை குறைவின்றி செய்தான். வெண்ணையை திருடினான். ஆடைகளை ஒளித்து வைத்தான்.

பின் கம்சனால் ஏவப்பட்டு தன்னை அழிக்க வந்த அரக்கர்களை எல்லாம் கொன்றான். காளிங்க நாகத்தின் மீது நடனமாடி அதன் திமிரையும், கோவர்த்தன மலையை உயர்த்தி இந்திரன் திமிரையும் அடக்கினான். ஆனால் எவருடைய திமிரையும் அடக்குவதற்காக அவன் அதை செய்யவில்லை. கம்சனிடமிருந்தும், மழையிடமிருந்தும் யாதவர்களைக் காப்பதற்காக அவன் செய்த காரியம் இவ்வாறு இருவரின் திமிரை அடக்கியது.

சிறந்த மனிதர்கள் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு காரியங்கள் செய்வதில்லை. அவர்கள் செய்யும் காரியமே உன்னத விளைவை ஏற்படுத்துகிறது. பின் கம்சன், காலயவான், ஜராசந்தன், நரகாசுரன், அநியாயம் செய்து வந்த சத்ரியர்கள் என அனைவரின் அழிவுக்கும் காரணமானான்.

காந்தாரி அவனுக்கு சாபமிட்ட போதும் “உலக நன்மைக்காகவே நான் துரியோதனனையும், அவன் சகோதர்ர்களையும் கொன்றேன். எனக்கேன் இந்த சாபம்” என்று கூச்சலிடவில்லை.

சுதாமனுக்கு அங்கீகாரம் அளித்து நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவன். திரவுபதியின் மானம் காத்து பெண்மையை போற்றியவன். “என்னிடம் அன்பைப் பொழிபவருக்கு நான் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவேன்” என்று உரைத்தவன். தன்னுடைய பக்தர்களான அர்ஜுன்ன், திரவுபதிக்காக செருப்புகளை தூக்கிவந்தவன்.

கிருஷ்ணனுடைய வாழ்வை வரலாறாக கொண்டிருந்தால் நட்பை போற்றுதல், பெண்மையைப் போற்றுதல், காமத்தை அனுபவித்தல், சுயநலத்தோடு இருத்தல், பொறுமை, நியாயத்தோடு வாழ்தல், தவறிழைத்தவனுக்கு தண்டனை வழங்குதல், தண்டனை வழங்கத் தேவையான சக்தியை தேடுதல், அப்படி தண்டனை வழங்கும்போதும் குற்றவாளி மீது மனதில் வெறுப்புணர்ச்சி கொள்ளாதிருத்தல் என ஏராளமான விசயங்களை மனிதன் உணர்ந்திருப்பான்.

அவனை அவதார புருஷனாக, கற்பனை கதாபாத்திரமாக, அல்லது இந்து மதக் கடவுளாக மட்டுமே கொண்டதனால் நிறைய பாடங்களை மனிதன் இழந்துவிட்டான்.

ஒரு மனிதன் தன்னுடைய கொள்ளுத்தாத்தா பிறந்த வருடம், இறந்த வருடம் தெரியாது போய்விட்டால் அல்லது அதற்கான ஆவணங்கள் தொலைந்து விட்டால், அவன் தன்னுடைய கொள்ளுத்தாத்தா வாழ்ந்த வரலாற்றை மறுத்துவிட முடியுமா?. அப்படி மறுப்பது போன்ற ஒரு தவறைத்தான் கிருஷ்ணன் விசயத்தில் வரலாற்றாசிரியர்களும், வரலாற்று மாணவர்களும் செய்து விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக