புதன், 6 ஜனவரி, 2016

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை – 4

“மாப்பிள்ளைக்கு பொண்ணை பிடிச்சிருக்கா?” என எல்லா பெண் பார்க்கும் படலத்திலும் கேட்கப்படுவதுண்டு. அதற்கு சிலவேளை பிறகு சொல்கிறோம் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறிவிடுவார்கள். ஒரு வேளை அவ்வாறு இல்லாமல் பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டால் உடனே கல்யாண தேதியை நிச்சயித்துவிடுவார்கள்.

இந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்று அவன் முடிவு செய்வது எதை வைத்து என்பது அவனுக்கே சரியாகத் தெரியாது. அவனுக்கு அப்போதைக்குத் தெரிந்ததெல்லாம் பெண்ணுடைய அழகான, கைகால் முடமில்லாத, கலரான, லட்சனமான உருவம் அல்லது உடல் மட்டுமே. அவனுக்கு அந்தப் பெண்ணுடைய மனதைப் பற்றிய எந்த பரிச்சயமும் கிடையாது.

அவன் உண்மையில் பிடித்திருக்கிறது என்று கூறியது பெண்ணுடைய வெளித்தோற்றத்தை மட்டுமே. அல்லது உடலை மட்டுமே. ( ஒருவேளை பரிச்ச்யமான பெண் எனில் குணங்களை பற்றியும் தெரிய வாய்ப்புள்ளது ). அந்த ஒற்றை வார்த்தையை மட்டும் கணக்கில் கொண்டு திருமணம் நடக்கின்றது.

பின் கல்யாணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில், உன்னை ஏன் தான் திருமணம் செய்துகொண்டேனோ? என்று இருவருமே புலம்புகிறார்கள். அவர்கள் உண்மையில் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருவர் அடுத்தவரின் உடலை மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

உண்மையில் இவர்கள் நிச்ச்யத்தின் போது “அவரை/அவளை பிடிக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் அவரது/அவளது உருவத்தை பிடித்திருக்கிறது” என்றே கூறியிருக்கவேண்டும். ஏனெனில் உடல் மட்டுமே மனிதனாக முடியாது. மனிதன் உடல் மற்றும் மனதின் கூட்டுகலவையாவன்.

மனிதன் என்றால் என்ன? என்று அறியாத மனிதனின் அறியாமையே இவ்வாறு உடலை மனிதன் என்று நினைக்க வைக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு கல்யாணம் என்ற ஒன்றை ஆயிரங்காலத்து பயிராக்கியும் இருக்கிறது. அதை காலாகாலத்துக்கும் பாதுகாத்து வைப்பதற்காக காதல் என்ற இயற்கையான ஒன்றை எதோ ஒரு பெரும் பாவத்தைபோலவும், சமூகவிரோத செயல் போலவும் மனிதனை நினைக்க வைத்து இருக்கிறது.

உடலை மட்டுமே பிரதானமாகக் கருதும் திருமணத்தில் தான் துணை இறந்த உடன் மறுமணமும் பரிசீலிக்கப்படுகிறது. உடல் குறைபாடுள்ள மனிதனை அல்லது மனுஷியை துணையாக ஏற்க தயங்குதலும் நடக்கிறது.

மனதிற்கும் மனிதனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் திருமணத்தில் மட்டுமே ஆனந்தம் குடிகொள்கிறது. மற்றவை சமுதாய அங்கீகாரத்திற்காக, துணிச்சல் வராத காரணத்திற்காக, பிள்ளைகளுக்காக, பெற்றோர்களுக்காக என வேறு யாரோ ஒருவருக்காக மட்டுமே வாழ்வதாகிறது.

தான், தனது என்று முழுச்சுயநலத்தில் வாழாத ஒரு மனிதனின் தியாகமும், பொதுநலமும் முழுமையற்றதாகவோ அல்லது வெறுப்புகளுடனோ மட்டுமே இருக்கும். எல்லா திருமணங்களும் காதலிலும் பாசத்திலும் ஆரம்பமாவதாக இருந்தால் “மோகம் முப்பதுனாள், ஆசை அறுபது நாள்” என்ற பழமொழியே வந்திருக்காதே.

மனிதனுக்கு எந்த விசயத்தின் மீது நம்பிக்கை இல்லையோ அந்த விசயத்திற்காக மட்டுமே அவன் அதிக நிரூபணங்களைத் தேடுகிறான். அவ்வாறான நிரூபணங்கள் தான் திருமணச்சடங்குகள், தாலி, மோதிரம், ஜாதகப்பொருத்தம், பத்துப் பொருத்தங்கள், நிச்சயதார்த்தம், ஊர்ப்பெரியவர்களின் ஒத்துழைப்பு எல்லாமே. இவையனைத்திற்கும் வழியில்லாத ஒரு மனிதனை தனது பெண்ணுக்கென்று மணமுடிக்கவே ஒரு மனிதன் பயப்படுகிறான்.

ஆனால் இந்த நிரூபணங்கள் அனைத்துமே படுக்கையில் சாகக்கிடக்கும் ஒரு நோயாளியின் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் தொழில் நுட்ப கருவிகளைப் போலத்தான். நோயாளி எந்நேரத்திலும் இறக்கலாம்.

இப்படி எத்தனையோ திருமணங்கள் இறந்துவிட்டன. ஆனால் அது வெளியில் தெரியாது இருப்பதால் இந்த சமுதாயம் என்ற மருத்துவர் தன்னுடைய திருமணம் என்ற நோயாளி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறது.

1 கருத்து: