ஞாயிறு, 31 ஜனவரி, 2016

மனித வாழ்வின் 4 பகுதிகள்

சில மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் முழுமையான வாழ்வை வாழ்வதாகத் தோன்றுகிறது. ஆனால் வேறு சில மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் வாழ்க்கையில் ஏதோ முக்கியமான ஒன்றை இழந்துவிட்ட்தாக தோன்றுகிறது. இதன் காரணம் என்ன?

மனித வாழ்க்கையில் நான்கு முக்கிய பகுதிகள் இருக்கின்றன. அந்த நான்கு பகுதிகளிலும் எவன் முழுமையாக வாழ்ந்து முடிக்கின்றானோ அவன் வாழ்வு முழுமையடைகின்றது. அதிலே ஏதேனும் ஒன்று குறைவுபட்டாலும் அவனது வாழ்வு முழுமையடைந்த வாழ்வாக இருக்காது.

அந்தரங்க வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வாழ்வு, சமூக வாழ்வு என்பவையே அந்த நான்கு முக்கிய பகுதிகளாகும். இந்த அனைத்தும் எல்லா மனிதர்களுக்கும் சரியாக்க் கிடைப்பதில்லை. ஆனால் ஒன்றுமே கிடைக்காமலும் இருப்பதில்லை.

ஒரு மனிதனுடைய மிகவும் தனிப்பட்ட விசயமாக இருப்பது அவனுடைய அந்தரங்க வாழ்வாகும். அவனுடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ஆழ்மனதிலுள்ள காயங்கள், அற்ப ஆசைகள் போன்றவை அடங்கியது அந்தரங்க வாழ்வாகும். தூங்குவது, தனிமையில் அழுவது, குளியலறை மற்றும் கழிப்பறை நடவடிக்கைகள் எல்லாமே அந்தரங்க வாழ்க்கைதான்.

நன்றாக கவனிக்க ஒன்று விளங்கும். ஒரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கையில் அவன் மட்டுமே ராஜா. அவன் மட்டுமே ஊழியன். அவனே அனைத்தும். இரண்டாம் மனிதர்கள் யாருமே இருப்பதில்லை, அவன் அனுமதிக்காத வரையில்.

ஒரு மனிதன் தனது நெருங்கிய சொந்தங்கள், நண்பர்களுடன் கொண்டிருக்கும் உறவானது குடும்ப வாழ்க்கையாகிறது. குடும்ப வாழ்க்கையில் வராத உறவுகளும், நண்பர்களும் உண்டு.

ஒரு மனிதன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை மனைவியுடனோ அல்லது நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்கிறான். இது அவன் குடும்பவாழ்க்கைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இன்னும் ஒருவன் தனக்கென்று எந்தவித அந்தரங்க வாழ்க்கையையும் வைத்திராமல் அனைத்தையும் தனது மனைவி அல்லது காதலியிடம் பகிர்ந்து கொள்வான். இது அவன் தனக்குப் பிடித்த காதலிக்கு தன் மீதான முழு உரிமையையும் தருகிறான் என்பதைக் காட்டுகிறது.

மூன்றாவதாக தொழில் வாழ்க்கை என்பது ஒரு மனிதன் பிழைப்புக்காக, பணம் சம்பாதிப்பதற்காக என்ன தொழில் செய்கிறான், அதை எப்படி செய்கிறான் என்பதைக் குறிப்பிடுகிறது. அது ஒரு பணியாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும் அது தொழில் சார்ந்த வாழ்க்கையே. நேர்மை, சமர்ப்பணம், நியாயம், நன்றி, உழைப்பு, புத்திசாலித்தனம் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பவன் இந்த தொழில் வாழ்வில் முன்னேறுகிறான்.

நான்காவது பகுதி ஒரு மனிதன் சமூகத்திற்கு செய்யும் தொண்டாகும். மற்ற மூன்று பகுதிகளையும் சிறப்பாக முடித்தவனே இதைச் சிறப்பாக செய்ய முடியும். ஏனெனில் தன் வயிறையும், தன் குடுப்பத்தார் வயிறையும் நிரப்பிய ஒருவனே சமூகத்தின் தேவைகளைப் பற்றி சிந்திக்க முடியும். இந்த நான்கு வாழ்க்கையையும் புரிந்து கொள்ளாத போது மனிதர்களிடையே பிரச்சனைகள் உருவாகின்றன. இல்லை புரிந்துகொள்ளாத மனிதர்களாலும் பிரச்சனைக்ள் உருவாகின்றன.

ஒருவன் தானுண்டு, தன் தொழிலுண்டு என்று இருக்கும் போது அவனால் எந்தப் பிரச்சனையும் வராதென்பது பலருடைய எண்ணம். ஆனால் அவ்வாறு இருக்கும் மனிதனின் அந்தரங்க வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கையில் முழுமையடையும் அளவுக்கு சமூக வாழ்க்கையில் முழுமையடைய மாட்டன். அவ்வாறான மனிதர்கள் அதிகம் உள்ள சமூகம் விரைவில் சீரழிந்துவிடும்.

தாய் நாட்டின் சகல வசதிகளையும் பெற்று படித்து, பட்டம் பெற்று உயர்ந்த நிலையடைந்து பின் சுயநலத்தோடு அயல் நாட்டில் குடியேறி தாய்நாட்டையும், சமூகத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பரதேசிகள் கூட அப்படி தானுண்டு தன் தொழிலுண்டு என்று இருப்பவர்கள் தான்.

தொழில் வாழ்க்கையில் நிலைபெறாத ஒருவனால் மற்ற மூன்றையும் பற்றி சிந்தனை கூட செய்ய முடியாது.

தொழிலை மட்டும் கவனித்து குடும்பத்தை கவனிக்காத மனிதனால் குடும்பமும், உறவுகளும் பாதிக்கப்படும். உறவுக் கலப்புகள் உருவாகும். அந்த மனிதனின் உடலும் கெட்டுப் போகும். நவீன காலத்து தொழிலதிபர்களில் பெரும்பான்மையானோர் இதில் அடங்குவர்.

சமூகத்தொண்டு என்பது எப்போதும் நான்காவதாக கருதப்பட வேண்டியது. அதை நான்காவதாக்க் கருதாமல் முதலாவதாக்க் கருதியவர்கள் தான் அரசியல்வாதிகள். சமூகத்தொண்டை தனது வாழ்க்கையின் அங்கமாகவே கருதாத மனிதர்கள்தான் முட்டாள்தனமாக இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து அரச பதவிகளில் அமர்த்தியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக