சனி, 6 பிப்ரவரி, 2016

பொருளகராதி - 1

சொல்லகராதி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொருளகராதி என்பது பலருக்குத் தெரியாது. ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் கொடுத்து அதற்குரிய பொருளை ஒரு வார்த்தை, ஒரு வரியில் அளிப்பதுதான் சொல்லகராதி. சொல்லகராதி பெரும்பாலும் இரு வேறு மொழிகளிடையேயான சொற்களை புரிய வைக்கவே பயன்படுத்தப் படுகின்றது.

ஒரு மொழியிலுள்ள (குறிப்பாக தாய்மொழி) அதிகம் புழக்கத்திலில்லாத சொற்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ள அதே மொழியிலுள்ள சொல்லகராதியைப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவு. ஏனெனில் மனிதர்கள் தனது தாய்மொழியை தனக்கு நன்றாக தெரியும் என்று எண்ணுவதால் தனது தாய்மொழியின் மீதும் அதிலுள்ள சொற்களின் அர்த்தம் மீதும் கவனம் செலுத்துவதில்லை.

மனிதன் தன்னுடைய சுபாவம் மற்றும் சூழ்நிலைக்கேற்பவே கூறப்படும் வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்கிறான். கூறியவன் என்ன அர்த்தத்தில் கூறினான் என்பது பற்றியோ, என்ன நோக்கத்தில் கூறினான் என்பது பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை என்று எங்கோ கேள்விப்பட்ட்துண்டு.

அது போல ஒவ்வொருவனும் தனக்குத் தெரிந்த ஒரு அர்த்தத்தையே தனது தாய்மொழியின் வார்த்தைகளுக்கு கொடுக்கிறான். அந்த அர்த்தமும் அவன் வாழும் காலத்திலேயே பலமுறை மாறிவிடுகிறது. அதிலே அந்த வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அவன் கண்டுபிடிப்பதே சிரம்ம். ஒருவேளை அவன் அர்த்தத்தை சிறிதும் புரிந்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாம்.

சொற்களை பற்றி அறிந்து கொள்ள சொல்லகராதி இருப்பது போல் அதன் பொருளை ஆழமாக விளக்க பொருளகராதியும் தேவை. அந்த பொருளகராதிகளும் நிறைய உருவாக வேண்டும். அதிலிருந்து பல குழப்பங்களும், முடிவில் பொருளைக் குறித்த தெளிவும் பிறக்கும். சொற்களுக்கு என்றும் பொருள் கிடையாது. பொருளையும், அர்த்தத்தையும் வெளிப்படுத்தவே சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை உண்மையாக வாழ்ந்த மனிதன் நன்கறிவான். ஏனெனில் உண்மைகளையும், இயற்கை உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் பல வேளைகளில் சொற்கள் சக்தியற்றவையாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக