வியாழன், 25 பிப்ரவரி, 2016

………………….......................ஆல் அறிமுகம்?

அண்ணாவைப் பற்றி யாரிடமாவது கேட்டால் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர். பெரும் பேச்சாளர். சில காலம் தமிழக முதல்வராக இருந்தவர் என்று கூறுவார்கள். அதே நேரம் ஹிட்லரைப் பற்றிக் கேட்டால் அவன் ஒரு கொடுங்கோலன், பல்லாயிரம் உயிர்களைக் கொன்றவன். இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவன் என்று கூறுவார்கள்.

இந்த இரண்டு மனிதர்களிடமும் தனிப்பட்ட அந்தரங்க விசயங்கள் என்னென்ன இருந்தன என்பது பொதுவெளியில் அனைவருக்கும் தெரியாத ஒன்று. ஆனால் அவர்களைப் பற்றி சமூகம் அறிந்துள்ள முகம் தான் மேலே குறிப்பிடப்பட்டது. அது அவர்களாகவே உருவாக்கிக் கொண்டது.

ஒரு மனிதனிடம் என்னென்ன இருக்கிறது என்பதை அவன் தீர்மானிக்க முடியாது. ஆனால் அவனிடம் இருக்கும் எதனெதன் மூலமாக அவன் வெளி உலகுக்கு அறிமுகமாக வேண்டும் என்பதை அவன் தீர்மானிக்கலாம்.

அண்ணா தெற்றுப்பல் கொண்ட மனிதர். அவ்வளவாக அழகு கிடையாது. ஆனால் அவர் பேச்சாளராக, ஆங்கிலப் பண்டிதராக அறியப்பட்டார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட முயற்சி. அது போல ஹிட்லர் சிறு வயதில் மிகச்சிறந்த ஓவியனாவான். ஆனால் அவன் தன்னுடைய குரூரத்தை சமூகத்திற்கு முன்னிறுத்தியதால் கொடுங்கோலன் ஆனான்.

நாம் காணும் மனிதர்கள் தன்னுடைய திறமையால் சிலரும், புத்திசாலித்தனத்தால் சிலரும், பணத்தால் சிலரும் நம்மிடையே அறிமுகமாகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது திறமைசாலி, புத்திசாலி, பணக்காரன் என்று அடையாளம் கண்டு கொள்கிறோம்.

ஒரு எழுத்தாளன் தனது எழுத்துகளாலும், ஒரு நடிகன் தனது நடிப்பாலும், ஒரு நடிகை தனது நடிப்பு மற்றும் உடம்பாலும் அறிமுகமாகிறார்கள்.

சில பெண்கள் தங்களுடைய அன்பாலும், பண்பாலும் அறிமுகமாகிறார்கள். இன்னும் சில பெண்கள் தனது திறமையாலும், வேறு சிலர் அழகாலும் அறிமுகமாகிறார்கள்.

ஆனால் இன்னும் சிலரோ இன்று தனது லெக்கின்ஸ் அணிந்த தொடையாலும், இறுக்கி அணிந்த டிஷர்ட்டில் தெரியும் மார்பகங்களாலும் மட்டுமே அறிமுகமாகிறார்கள். ஒரு வேளை அவர்களிடம் வெளி உலகிற்கு காட்டுவதற்கு வேறு ஏதேனும் மதிப்புமிக்க விசயம் இல்லையோ?

இல்லை. அவர்களிடம் பார்ப்பதற்கு என் போன்றோருக்கு வேறு ஏதேனும் தென்பட வில்லையா?. ஆனால் என் போன்றவர்களின் கண்கள் எல்லோரிடமும் அப்படிச் செல்வதில்லையே.

ஒருவேளை பார்ப்பவரின் மனதில் உள்ள அழுக்குதான் அப்படி அழுக்கான விசயங்களை பார்க்க வைக்கிறதோ? எனில் ஒரு ஆண் தன் பேண்ட்டின் சிப்பை திறந்து போட்டிருந்தால் அதை கவனிக்காமல் செல்பவர்கள் எத்தனை பேர்?

பற்றிக் கொண்டதற்கு யார் காரணமாயிருக்க முடியும்? பஞ்சா? இல்லை நெருப்பா? இல்லை இரண்டையும் அருகருகே வைத்த கலாசாரமா? இல்லை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் இந்த சமூகமா?

என்ன வாசகனே, வாசகியே. நீ உன்னுடைய எதனால் அறிமுகமாகிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக