ஞாயிறு, 6 மார்ச், 2016

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை - 5

வரதட்சணை வாங்காமல் தான் திருமணம் செய்வேன் என ஒரு மணமகன் கூறினால் (பொதுவாக அப்படிக் கூறமாட்டான். ஆனால் வாங்குவேன் என்றும் கூறமாட்டான். பூசி மெழுகினால் போல் தான் அதைப் பற்றிப் பேசுவார்கள்.) அவனுக்கு கல்யாணச் சந்தையில் பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது.

ஏனெனில் நான் மாப்பிள்ளைக்கு இன்னின்ன செய்தேன் என்று மாமனார் தன் நண்பர்களிடமும், சமுதாயத்திலும் கூறுவதற்கு வரதட்சணையே உதவி செய்கிறது. அது, வரதட்சணை என்ற ஒரு வழக்கம் இருப்பதால் கேட்கிறார்கள் என்ற நிலை போய் கட்டாயமாக வரதட்சணை கொடுக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறது.

எந்த மணமகனும் வரதட்சணை பணமாகவோ, நகையாகவோ மாப்பிள்ளைக்கு நகைகள், பைக், கார் என்பதாகவோ எதுவும் எனக்கு தரப்படக்கூடாது என்று ஒதுக்கித் தள்ளும் பட்சத்தில் அவன் ஒரு பெரும் குறையுள்ளவனாக சித்தரிக்கப் படுகிறான். திருமணம் இதைத்தான் அந்த மணமகனுக்கு இந்த சமுதாயத்தில் வழங்குகின்றது.

வரதட்சணையே வாங்காமல் எந்த உதவியும் பெண் வீட்டிலிருந்து எதிர்பார்க்காமல், சொந்தக்காலில் நிற்கும் மனிதனை எவருக்கும் ஏற்றுக்கொள்ள மணமில்லை. மணமகன் சொந்தக்காலில் நிற்பது போல் நிற்க வேண்டும். அதுவும் தன்னுடைய (சமூகத்தினுடைய) கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தன்னுடைய கட்டுப்பாட்டை மீறிய சொந்தக்காலாக இருக்கக் கூடாது. அது சமுதாயத்திற்கு பிடிக்காது. ஒருவன் சமுதாயத்தோடு இணைந்து தன்னுடைய சுயமரியாதையை இழந்து விடுவதையே இந்த சமுதாயம் விரும்புகிறது.

ஒருவன் வரதட்சணை வாங்காமல் விட்டால், அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் அவனுடைய மாமன் வீட்டார், மற்ற சொந்தங்கள் தலையிட முடியாது. எந்த அளவுக்கு ஒருவன் மற்றவரிடம் இருந்து எதிர்பார்க்கின்றானோ அந்த அளவுக்கு அவர்களிடத்தில் அவனுடைய சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஆகவேதான் மோதிரம், தங்க செயின், அன்பளிப்பு என்ற பெயரில் அந்த மனிதனின் சுயமரியாதையை, சுதந்திரத்தை பறிக்க இந்த சமுதாயம் ஏற்பாடு செய்துள்ளது.

காதலுடன் கூடிய திருமணத்திலும் கூட இதுதான் நடக்கிறது. இது இன்னும் சங்கடத்தை அந்த மணமகனுக்கு உருவாக்குகின்றது. அவன் எதுவும் வாங்கமாட்டேன் என்று கூறினால் உங்களுக்கு என் மீது காதலிருந்தால் நிச்சயம் என் தந்தை தருவதை ஏற்றுக்கொள்வீர்கள் என காதலி கூறுகிறாள். பிறகு அவன் தொலைந்து விடுகிறான். அவனுடைய மொத்த மன உறுதியும் பாழாகிவிடுகின்றது.

இம்மாதிரி மனிதனை அடிமையாக்குவதையே வரதட்சணை என்ற பெயரில் சமூகம் செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக