ஞாயிறு, 13 மார்ச், 2016

உருவ வழிபாடு ஏன்?

Ganesh god

பண்டைய யூதர்கள் சிலைகளை உருவாக்கி அதன் மூலமாகவே கடவுளை வழிபட்டனர். இன்றும் அவர்கள் அப்படியே. இது மதத்திலும் சிவலிங்கமும், திரிசூலமும், சங்கு சக்கரமும் உருவ வழிபாடுகளே. சிவனுக்கென்றும், விஷ்ணுவுக்கென்றும் தனித்தனி அடையாளங்கள் உள்ளன. கிறிஸ்தவ மதத்தில் ஏசுநாதரும், அன்னை மரியும், சிலுவையும் இந்து மதத்தின் உருவங்களுக்கு ஒப்பானதாக வழிபடப்படுகின்றன.

கடவுளே இல்லை என்று உரைத்த ஞானிகளான புத்தரும், மஹாவீரரும் கூட இந்தியாவில் கடவுளாக்கப்பட்டனர். உலகெங்கும் உள்ள புத்த மதத்தினரின் கடவுள் இன்று புத்தரின் சிலைதான். இதுவேதான் மஹாவீரரின் கதையிலும் நடக்கிறது.

கடவுளின் ரூபமென்ன? பரம்பொருள் குறிப்பிட்ட ரூபத்தில் மட்டும் இருக்கக் கூடியவரா? பரம்பொருள் உருவமற்றவர் என்று மிகப்பெரும் சிந்தனையை, ஞானத்தை முன்வைத்த இஸ்லாம் கூட அவரை சிலை வைத்து வணங்குதல் கூடாது என்று வெறுமனே கூறி பெரும் முட்டாள்தனத்தை செய்தது.

சிலை என்பதும், உருவம் என்பதும் உண்மையில் கடவுளுக்கான அடையாளங்களே. அவை கடவுளல்ல என்ற புரிதல் அங்கே இருக்கவில்லை. ஆகையால் தான் இன்று எண்ணற்ற இந்துக்கோவில்கள் ஒரே வித வடிவமைப்பைக் கொண்டிருப்பது போல், தேவாலயங்கள் அனைத்தும் ஒரே வித வடிவமைப்பைக் கொண்டிருப்பது போல், அனைத்து மசூதிகளும் ஒரே வித வடிவமைப்பில் கட்டப்படுகின்றன. மசூதியில் குறிப்பாக வெள்ளை அல்லது பச்சை கலந்த வர்ணங்கள் பயன்படுத்தப் படுகின்றன. வளைந்த கூரை அமைப்பையும், பிறை நிலவையும், 786 என்ற அடையாளத்தையும் கொண்டிருக்கின்றன. ஏன் அவர்களுடைய தொப்பி கூட (மன்னிக்கவும் குல்லா கூட. அதற்கே உரித்தான பெயர் குல்லா) ஒரு குறிப்பிட்ட வடிவத்திலேயே செய்யப்படுகின்றது.

கடவுளைத்தேடும் பாதையில் அடையாளத்தை துறந்து விட்டவர்கள் என்று எவருமில்லை. ஒரு வேளை முகமது நபி போன்ற ஞானிகள் வேண்டுமானால் அந்த தகுதி கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவர் கூறியதைப் போன்று அனைத்து முஸ்லிம்களும் இருக்க முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட உணர்வை மனிதனிடம் நிலை நிறுத்துவதற்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் நிச்சயம் தேவைப்படுகிறது. அது கோவிலில் உள்ள சாமி சிலையாக இருந்தால் என்ன? கோவிலுக்கு போகும் போது வைக்கப்படும் தொப்பியாக இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

இதே அடையாளப்படுத்துதலின் நீட்சிதான் தேசங்களின் கொடியும், சின்னங்களும் உருவாகக் காரணமாகியது. இதனால் தான் தேசியக்கொடியைப் பார்க்கும் போது மட்டும் மனிதன் தேசப்பற்றுள்ளவனாகிறான். ஒருவேளை அது இருப்பதால் தான் அப்போது மட்டுமாவது தேசப்பற்றுள்ளவனாக இருக்கிறான். இல்லையெனில் அதுவும் இருக்கமாட்டான்.

உண்மையில் மனிதனுக்கு மூலத்தைப் பற்றிய ஞானம் வருவதே இல்லை. அது மிக அரிதாகவே வருகிறது. ஆனால் அந்த ஞானத்தை வரவைப்பதற்கான காரணங்களே அடையாளங்கள். தேசப்பற்றை உருவாக்க தேசியக்கொடி தேவைப்படுகிறது. அது போல கடவுள்தன்மையை உருவாக்க கடவுள் சிலைகளும் அது சார்ந்த அடையாளங்களும் தேவைப்படுகிறது.

மூலத்தை மட்டுமே ஆதரித்து அதற்கான தேடுதலை மனிதரிடத்தில் உருவாக்கும் அடையாளங்களை அழித்து விடுவது என்பது அடையாளத்தைக் காட்டினால் மட்டுமே மூலத்தை அடைய ஆசைகொள்ளும் பெரும்பான்மை மக்களுக்கு மூலத்தை அடையும் வாய்ப்பை மறுப்பதாகும்.

இந்து மதமும், யூத மதமும் மட்டுமல்ல, தனக்கென தனிப்பட்ட அடையாளங்களை கொண்டிருக்கும் எல்லா மதங்களும், அவை வெளிப்படையாக கடவுளுக்கு உருவம் அளிப்பது முட்டாள்தனம் என்று கூறினாலும் மறைமுகமாக உருவ வழிபாட்டையே பின்பற்றுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக