வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தேவையான வரலாறு–4 (இராமானந்தர்)

ஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தது. அதுவும் சிவன், பார்வதி, விஷ்ணு என்று பலதரப்பட்ட கடவுள்களையும் வழிபடும் இந்தியாவில், அதுவும் காசியில் பிறந்த ஒரு பிராமணரால் சொல்லமுடிந்தது.

அவர் பிராமணக்குடும்பத்தில் பிறந்த ஒரு பிராமணர். வர்ணாசிரம கோட்பாடு மற்றவர் அளவில் எப்படி இருந்தாலும் இவர் அளவில் மிகச்சரியாகவே இருந்தது. ஏனெனில் பிராமணக்குடும்பத்தில் பிராமணர்கள் மட்டுமே பிறப்பதில்லை. மேலும் பிராமணர்கள் அனைவரும் பிராமணக்குடும்பத்தில் மட்டுமே பிறப்பதில்லை.

பிறப்பாலும், குணத்தாலும் பிராமணரான இவர் பக்தி மார்க்கத்தில் ஆன்மாவையும், வாழ்வின் பொருளையும் தேடும் பெரும் தேடல் கொண்டவராக இருந்தார்.

பிராமணக்குடும்பத்தில் பிறக்கும் பெரும்பாலானோர் தேடலுக்கு பதிலாக சாஸ்திரங்களிலும், கடவுளை போற்றுதலுக்குப் பதிலாக மற்ற வர்ணத்தாரை தூற்றுவதிலும் காலத்தை வீணடித்த காலத்தில் சாதி, மதம், ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவரையும் சீடராக ஏற்ற ஒரு சிறந்த குருவாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.

பக்தி மார்க்கத்தில் சிறந்து விளங்கிய இவர் வட இந்தியாவில் இந்து சமயத்தின் பக்தி மார்க்கத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவராவார். மேலும் இவருடைய கருத்துக்கள் சீக்கிய மதக்குருக்களாலும், சீக்கிய மதத்தின் புனித நூல்களிலும் பெரிதும் இடம் பெற்றுள்ளன.

சமுதாயத்தில் தனக்கு ஒரு நற்பெயர் இருந்தபோதிலும் அதைப் பற்றி பெருமைப்படாமலும், அது போவதால் கவலைப்படாமலும் வாழ்ந்த ஒரு ஞானியாவார். தான் ஆற்றும் காரியத்தால் தனக்குக் கெட்டபெயர் வரும் என்ற போதிலும், அதைப் பலர் எடுத்துரைத்த போதிலும் யாரோ ஒருத்தியால் ஆற்றங்கரையில் விட்டுச் செல்லப்பட்ட முஸ்லிம் குழந்தையை எடுத்து வளர்த்தார்.

பிற்காலத்தில் அக்குழந்தையே தந்தையை மிஞ்சும் ஆன்மீக குருவாக, ஞானம் பெற்ற இந்திய சூஃபியாக விளங்கிய கபீர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக