செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நல்ல பெயர் என்ற கெட்ட வார்த்தை

இந்த சமுதாயத்தின் எல்லா இடங்களிலும் நல்ல பெயர் எடுப்பது என்பது மனிதனை தவறான பாதையிலேயே செலுத்துகிறது. படிக்கும் மாணவன் நல்ல பெயர் எடுக்க வாத்தியாருக்கு ஜால்ரா போட வேண்டும். அந்த வாத்தியார் யோக்கியமானவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவரோ நிர்வாகத்துக்கு ஜால்ரா போடுபவராக இருப்பார். நிர்வாகம் மிகவும் நியாயமற்றதாகவே பல நேரங்களில் விளங்குகிறது.

தங்களுக்கு நடக்கும் அநியாயங்களைத் தட்டி கேட்கும் நோக்கத்தில் மாணவர்கள் கொதித்தெழும்போது அங்கிருக்கும் அந்த நல்ல பையன் அநியாயத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களோடு நிற்க வேண்டும். அப்படி நின்றால் மட்டுமே அவன் நல்ல பையன் என்று பெயர் எடுக்க முடியும்.

ஒரு வேளை அந்த மாணவன் அதைச் செய்யாமல் கெட்ட பெயர் வாங்கும் வேளையில் அதன் பிறகு அவன் வாழ்வில் வரும் பெரும்பான்மையோர் அவன் வாங்கிய கெட்ட பெயரையே கருத்தில் கொள்வர். இவன் தரப்பிலும் நியாயம் இருக்குமோ? என்று ஆராயக்கூட முற்படமாட்டார்கள். அதிர்ஷ்ட வசமாக எவரேனும் ஆராய முற்பட்டாலும் “இவன் மீதும் தவறிருக்கலாம்” என்ற சந்தேகத்துடனேயே ஆராய்வர்.

ஓரிடத்தில் ஜால்ரா போடாமல் அவன் வாங்கிய கெட்ட பெயர் அந்த மனிதனின் எதிர்காலம் முழுவதும் எதிரொலிக்கிறது. இதே நிலை பணியிடங்களில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் நடக்கிறது.

ஜால்ரா போடத்தெரிய வேண்டும், அங்கே எந்தக் கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளார்களோ அதற்கு கட்டுப்பட வேண்டும். (அவை சரியா தவறா என்பது பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாது) தன்னுடைய சுயத்தன்மையை அழித்துவிட வேண்டும். பச்சோந்தியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இருப்பவனுக்கு மட்டுமே சம்பள உயர்வு, பதவி உயர்வு அனைத்தும் வழங்கப்படும். இல்லையெனில் இடமாற்றம், வேலை இழப்பு மட்டுமே கிடைக்கும்.

இதே நிலை ஆட்சியமைப்பிலும் நடக்கிறது. பிரதம அமைச்சருக்கும், கவர்னருக்கும் கூழைக்கும்பிடு போடுபவர்களே நீண்டகாலம் நற்பெயர் எடுக்க முடியும்.

சமுதாயம் எப்போதும் பெரும்பான்மைக்கு ஆதரவாக இருக்கின்றது. அந்த பெரும்பான்மை மனிதர்கள் எப்போதும் முட்டாள்தனமான கட்டுப்பாடுகளையும், வழக்கங்களையும் சார்ந்த்துள்ளார்கள். ஏனெனில் அவர்கள் முட்டாள்கள். சிறுபான்மை புத்திமான்களை இவர்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள்.

உண்மையும், நியாயமும் எப்போதும் சிறுபான்மையினரால் மட்டுமே புரிந்து கொள்ளப்படுகின்றது. அந்தச் சிறுபான்மையினரின் பக்கம் நின்று பார்க்கும்போது நல்ல பெயர் என்பது மிகவும் கெட்ட வார்த்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக