வெள்ளி, 22 ஏப்ரல், 2016

கர்ணன்கள்

“எல்லா அம்மாவும் சிறந்தவரல்லர். ஏனெனில் சில குழந்தைகள் குப்பைத்தொட்டியிலும் கிடக்கின்றன” என்ற ஒரு வாசகம் உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டு.

பாரதத்தில் கர்ணன் மிகப்பெரும் வீரன் என்பதை அறிந்திருந்தும் தனது படையில் அவனுக்குரிய இடத்தை தர மறுக்கிறார் பீஷ்மர்.

உள்மனதில் கர்ணன் மீது ஆசை இருந்த போதும், சூத்திர குலத்தில் பிறந்தவனை விவாகம் செய்ய மாட்டேன் என்று மறுக்கிறாள் திரவுபதி.

தன்னிடம் சீடனாக வரும் கர்ணனை பிறப்பைக் காரணம் காட்டியே ஏற்க மறுக்கிறார் துரோணாச்சாரியார்.

யுத்த களத்திலும் தாழ்ச்சிக் குலத்தில் பிறந்த ஒருவனின் ஆணைகளை ஏற்க மாட்டேன் என்று மறுக்கிறான் அரசன் சல்லியன்.

இவ்வாறு ஒருவன் பிறப்பிலிருந்தே அவமானங்களை சகித்து வந்ததற்கு காரணமாக அவன் செய்த குற்றம் ஏதுமில்லை. அதற்கு ஒரே காரணம், அதுவும் அவனுடைய தாய் செய்த குற்றம். தவறாகப் பெற்றெடுத்த அவனை அனாதையாக விட்டது.

கர்ணன் தவறாகப் பிறந்தவன் என்று மட்டுமே உலகம் கூறுகிறது. உண்மையில் அவனுடைய தாயே அவனைத் தவறாகப் பெற்றெடுத்தாள். ஆனால் கர்ணன் தவறாகப் பிறந்தவனல்ல. இந்த உண்மையை உலகம் ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று ஏராளமான கர்ணன்கள் உலகில் உருவாகியிருக்க மாட்டார்கள்.

கர்ணன்கள் உருவாகவே இல்லை. இந்தச் சமூகமே அவர்களை உருவாக்குகிறது. துணையைப் பிடிக்காமலேயே மணம் செய்து கொண்ட கணவன் மனைவியர் வேறொருவரை மனதில் எண்ணிக்கொண்டு துணையோடு புணர்ந்து பெறும் குழந்தைகளை எவருடைய குழந்தைகள் என்று கொள்வது? மனதில் இருப்பவரின் குழந்தையென்றா? இல்லை கட்டிலில் இருப்பவரின் குழந்தையென்றா? அவ்வாறு பிறக்கும் குழந்தையின் மேல் பெற்றவருக்கு பாசம் ஏற்படுமா?

பெற்றோர் இருந்தும் பாசம் கிடைக்காத இப்படிப்பட்ட குழந்தைகள் இன்று எத்தனை? எத்தனை? அம்மாவின் அரவணைப்பு சரியாகக் கிடைக்காத மகனும், அப்பாவின் பாதுகப்பு சரியாகக் கிடைக்காத மகளும் மட்டுமே காதல் என்ற பெயரில் இனக்கவர்ச்சியில் ஏமாற்றுக்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். இவர்கள் பெற்றோர் கூட இருக்கும் கர்ணன்கள்.

ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது கொண்ட காதலில் இந்த சமுதாயத்தின், சாதியின், மதத்தின் தீட்டு படாமலிருந்தால், சமுதாயத்தில் காதலும், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு அனுபவமும் சாதாரணமான ஒன்றாக இருந்திருந்தால் (அப்படி ஒன்றாக இருந்த வேட்டைச் சமூக முறையில் அனாதைகளும், கற்பழிப்புகளும் இல்லை. காதலர் தினமும் இல்லை.) இந்தச் சமூகம் இன்னும் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக