செவ்வாய், 26 ஏப்ரல், 2016

எது முதலில் உருவானது?

அன்பே சிவம் என்று தமிழில் சொல்லப்படும் விசயத்தை LOVE IS GOD என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். இதிலே முதலில் சொல்லப்பட்டது எது? என்ற கேள்வி அவசியமற்றது.

ஆங்கிலேயர்கள் LOVE IS GOD என்பதை முதலில் கூறியிருக்கலாம். ஆனால் அதைத்தான் நம்மவர்கள் காபி அடித்தார்கள் என்று கூறுவது தவறானது. அது போல நம்மைப் பார்த்து அவன் காபி அடித்ததாக கூறினாலும் தவறானதே.

மிக உயர்ந்த விசயங்கள் அனைத்தும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஒரே சமயத்திலோ அல்லது வெவ்வேறு சமயத்திலோ தானாகவே தோன்றியிருக்கின்றன. அது காபி அடிக்கப்படாமலேயே நிகழ்ந்திருக்கின்றது.

மகாபாரதத்தில் தாயான காந்தாரியின் அருளால் துரியோதனின் தொடையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஆயுதம் துளைக்க முடியாதபடி உறுதியாகி விடுகிறது. எதிரியான பீமன் அந்தத் தொடையில் அடித்தே அவனைக் கொல்கிறான்.

அதுபோல கிரேக்க இலியட் காவியத்தின் நாயகன் அகிலீஸின் தாய் தீடிஸின் அருளால் அவனது குதிகாலைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் உறுதியாகி விடுகிறது. எதிரி அந்தக் குதிகாலில் அம்பு செலுத்தியே அவனை பலமிழக்கச் செய்கிறான். பாரதம் எழுதிய வியாசரோ, இலியட் எழுதிய ஹோமரோ ஒருவரை ஒருவர் காபி அடிக்கவில்லை.

படிப்படியாக மனிதனது உடலை விஷத்திற்குப் பழக்கப்படுத்துவதன் மூலம் ஒருவனது உடல் விஷம் தாக்காத தன்மையைப் பெறமுடியும் என்பது ஒரு தற்காப்புக் கலை. இக்கலையை சந்திர குப்த மௌரியருக்கு சாணக்யர் பயிற்றுவிக்கிறார்.

அதே காலகட்டத்தில் (சரியாக 2 நூற்றாண்டுகளுக்குப் பின்) மிதிரிடேட்ஸ் 6ம் மன்னரின் தாய் தனது கணவனான மிதிரிடேட்ஸ் 5 எதிரிகளின் விஷத்தால் கொலை செய்யப்பட்ட போது தன் மகனுக்கு இதைப் பயிற்றுவிக்கிறாள். அந்தத் தாய்க்கு சாணக்யரின் விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காபி அடிக்கவும் வழியில்லை.

இந்தியாவில் சிவன் ஆதிகாலத்தில் இருந்தே தெய்வமாக வழிபடப்படுகிறான். அதுபோல மற்ற பழம்பெரும் நாகரீகங்கள் முளைத்த அனைத்து நாடுகளிலும் ஒரு நெருப்பு சார்ந்த, அழிக்கும் தெய்வத்தையே ஆதி முதல் தெய்வமாக வழிபட்டுள்ளனர். யாரும் யாரையும் காபி அடித்திருக்கவில்லை.

கையில் ஒன்றுமே வைத்துக் கொள்ளாத டையோஜீனஸ் என்ற கிரேக்கத்துறவி கையில் ஒரு திருவோடு வைத்திருந்த இன்னொரு துறவியைப் “ஓடு வைத்திருக்கும் அவன் என்னை விடப் பணக்காரன்” என்று குறிப்பிட்டாராம். இதே போன்ற வார்த்தைகளை தன்னைப்போல் துறவியாகி விட்ட பத்ருஹரி ராஜாவைப் பார்த்து “நீ பணக்காரனப்பா. என்னிடம் ஏதுமில்லை. உன்னிடம் ஒரு ஓடும், நாயும் இருக்கிறதே” என்றாராம் தமிழ் நாட்டு சித்தர் பட்டினத்தார். இந்த ஞானிகளும் ஒருவரை ஒருவர் காப்பியடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவையனைத்துமே மிகச்சிறந்த மனிதர்களுக்குத் தோன்றிய சிந்தனைகள் அவ்வளவுதான். இதிலே எது முதலில் தோன்றியது? அதை இரண்டாவது சொன்னவர் எப்படி காப்பியடித்தார் என்று அர்த்தம் கற்பிப்பது முட்டாள்தனம். மேலும் உயர்ந்த விசயங்களைப் பொறுத்தமட்டில் விசயங்களே முக்கியத்துவம் வாய்ந்தவை. அதைச் சொன்னவர்கள் அவ்விசயங்கள் வெளிப்படக் கருவிகளாக இருந்தவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக