திங்கள், 9 மே, 2016

பொருளகராதி–3 (குரு)

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது எல்லா மனிதர்களுக்கும் பிடித்த பழமொழியோ இல்லையோ அது எல்லா ஆசிரியர்களுக்கும் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அது அவர்களை கவுரவபடுத்துகிறது. அல்லது அப்படி நினைத்துக் கொள்கிறார்கள்.

உண்மை அப்படி இல்லை. குருவும், ஆசிரியரும் ஒன்றல்ல. ஒன்றாகவும் முடியாது. குரு என்கிற ஸ்தானம் தனது வாழ்வு முழுவதையும் சீடனின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து விட்ட நிலையாகும். ஆனால் ஆசிரியர் என்பவர் சம்பளத்திற்காக ஒரு வேலை செய்ய வந்தவராவார்.

அது போல சீடனும், மாணவனும் ஒன்றல்ல. சீடன் என்பவன் தனது குருவுக்காக எந்தப் பணிவிடையும் செய்வான். மாடு மேய்ப்பான், சோறு சமைப்பான். துணி துவைப்பான். கால் பிடித்து விடுவான். ஆனால் இந்த மாணவனோ பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே போன பிறகு வணக்கம் கூட வைக்கமாட்டான்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பழமொழியை எந்தக் குருவும் தன்னுடைய சீடனிடம் கூறியிருக்கமாட்டார். காரணம் அவர் குரு. தனக்கு சீடன் மரியாதை அளிக்க வேண்டும் என்றென்னும் பழக்கம் இல்லாதவரே குரு. ஒருவன் மரியாதை அளிப்பதால் அவனுக்கு அதிகமும், மரியாதை அளிக்காமல் இருப்பதால் குறைவாகவும் குரு அளிப்பதில்லை. அவர் எப்போதும் நிறைவாகவே அளிக்கிறார்.

நமது வாத்தியார்களை போல அவர் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை காட்டி மிரட்டுவதில்லை.

நமது வாத்தியார்களைப் போல அவர் ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப நடத்துவதில்லை. பாடத்தை மாணவர்களுக்குத் திணிப்பதுமில்லை. அவர் கேள்வி கேட்டு அதன் மூலமாகத்தான் பாடமே நடத்துவார்.

குருவுக்கு எந்தக் கல்லூரியிலோ, பல்கலைகழகத்திலோ இருந்துதான் பாடம் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை ஒரு உண்மையான குரு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அதன் விதிகள் அவரைக் சிறைப்பிடிப்பதில்லை.

அவர் சுதந்திரமானவர். மேலும் சீடர்களுக்கும் முழு சுதந்திரம் அளிப்பவர்.

உணவும், உடையும், இருப்பிடத்தையும் தவிர வேறு எதையும் உடைமையாக கொள்ளாதவர். எதன் மீதும் ஆசை கொள்ளாதவர். கற்க வரும் சீடன் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்று எண்ணாதவர்.

எந்த ஒரு குருவும் தன்னிடம் கற்க வரும் பெண் மீது ஆசை கொள்ளமாட்டான். எந்தப் பெண் குருவும் கற்க வரும் மாணவனோடு ஓடிப்போகமாட்டாள்.

ஆனால் இந்த அத்தனை கருமங்களும் ஆசிரியர்-மாணவர் உறவில் நடக்கிறது. இதிலே எவ்வாறு குருவின் ஸ்தானத்தில் ஆசிரியரை வைப்பது? சீடனின் ஸ்தானத்தில் மாணவனை வைப்பது? இப்போதைய குருக்களென்று கூறிக்கொள்ளும் ஆசிரியர்கள் இப்பழமொழியை பயன்படுத்துவது சுத்த ஏமாற்றுவேலையே.

2 கருத்துகள்:

  1. இன்றைய நிலையில் அனைவரும் ஆசிரியர்களே மாறாக குருவாக நினைத்து நாமே ஓர் இடம் அமைத்துக்கொன்டாலும் எந்த பெற்றோரும் அதை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை

    பதிலளிநீக்கு