புதன், 11 மே, 2016

தேவையான வரலாறு–5 (ஆனி சல்லிவன்)

அந்தச் சிறுமிக்கு எட்டு வயதாக இருந்த போது ட்ராக்கோமா என்ற கண் நோயால் பார்வை பரிபோகிறது. அதே ஆண்டில் தாயும் இறந்து விடுகிறாள். குடிகாரத் தந்தையோ அச்சிறுமியையும், அவளது தம்பியையும் ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விடுகிறார். அங்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் தன்னோடு இருந்த தம்பியும் நோயால் இறந்து விடுகிறான்.

பலவீனமான மனிதர்கள் ஒரு காதல் தோல்விக்கே தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் சிறு வயதிலேயே இத்தனை வாழ்க்கைத் தோல்விகளுக்குப் பிறகும் அந்தச் சிறுமி வாழ்ந்து சாதிக்கிறாள் என்றால் அவள் போற்றத்தகுந்தவள் தானே.

அவள் தான் ஆனி சல்லிவன்.

ஒரு குழந்தையை எந்த வகையான விளையாட்டோ, குழந்தைத்தனங்களுக்கோ, சிறு வயதின் சந்தோஷங்களுக்கோ அனுமதிக்காமல் இரண்டரை வயதிலேயே LKG, UKG, PRE KG என்று அனுப்புவதால் மட்டும் அது படித்து பெரிய ஆளாகிவிடாது. உண்மையில் அதற்கு படிக்கும் ஆர்வம் இருக்க வேண்டும் என்பதற்கு சல்லிவனே சாட்சி.

அதனால்தான் ஆரம்பகால கஷ்டங்களால் பதினான்கு வயது வரை கல்வியறிவைப் பெறமுடியாத சல்லிவன் அதன் பிறகே படிக்க ஆரம்பித்தாலும் இருபது வயதில் பட்டம் பெற்றார்.

அதன் பின் ஆர்தர் கெல்லர் என்பவர் தனது கண் பார்வையற்ற, பேசும் திறனற்ற, காது கேளாத தனது ஏழு வயது குழந்தைக்கு ஆசிரியர் வேண்டும் என்று கொடுத்த வேண்டுகோளின் பெயரில் ஹெலன் கெல்லர் என்ற அக்குழந்தைக்கு ஆசிரியரானார்.

ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் மூலமாக அறியப்படுகிறார்கள். அது போலவே சல்லிவன் ஹெலன் கெல்லரின் எழுச்சிமிக்க வாழ்விலிருந்து அறியப்படுகிறார். சல்லிவனை ஒருவர் அறிய வேண்டுமாயின் அவர் அதற்கு முன்பாக ஹெலன் கெல்லரைத் தெரிந்திருக்க வேண்டும்.

ஹெலன் கெல்லருக்கு ஆசிரியரான நாள் முதல் நாற்பத்தொன்பது ஆண்டுகள் கெல்லருக்கு ஆசிரியராகவும், உற்சாகம் அளிக்கும் உந்துசக்தியாகவும், நண்பராகவும் விளங்கினார் சல்லிவன்.

“என்னுடைய உடல் என்றோ பிறந்துவிட்டது. ஆனால் என்னுடைய ஆன்மா அன்றுதான் பிறந்தது” என்று தான் தனது ஆசிரியரான சல்லிவனை முதன் முதலாக சந்தித்த தினத்தை குறிப்பிடுகிறார் ஹெலன் கெல்லர்.

“ஒரு சிறந்த ஆசிரியர் பிறவிலேயே குருடாகப் பிறந்த மாணவனுக்கு நிறங்களையும் புரிய வைப்பவர்” என்று கூறுவார்கள். ஆனால் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத ஒரு குழந்தைக்குப் பாடம் கற்றுத் தந்து, தன்னம்பிக்கையையும் ஊட்டி, ஒரு சிறந்த சாதனையாளராகுமளவிற்கு பயிற்றுவிக்க முடிந்ததென்றால் அந்த ஆசிரியரின் திறனை எவ்வாறு பாராட்டுவது?

அனைத்து விசயங்களையும் கைவிரல்களால் எழுத வைத்தும், பின் அந்தப் பொருட்களை தொட்டு உணர வைப்பதன் மூலமாகவும் ஹெலனுக்கு கற்பித்தார் சல்லிவன்.

“கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியரல்லர். எவரிடமிருந்து மாணவன் கற்றுக் கொள்கிறானோ அவரே ஆசிரியர்.” என்பதற்கிணங்க வாழ்ந்து காட்டிய சிறந்த ஆசிரியர், வழிகாட்டி சல்லிவன்.

1 கருத்து:

  1. அவரின் வாழ்க்கை பிரம்மிக்கதக்கது. பகிர்ந்தமைக்கு நன்றி . மறுபடியும் ஏன் வலைப்பூவில் எழுத துவங்கியுள்ளேன் . நேரமிருக்கும்போது ஏன் வலைபூ வரவும் . ethilumputhumai.blogspot.com

    பதிலளிநீக்கு