வெள்ளி, 24 மார்ச், 2017

வரதட்சணையை நாம் சாகவிடவில்லை

“உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கூறிவிடுகின்றனர். இந்தக் கூற்று உண்மையில் பெண் வீட்டாரின் அகங்காரத்தின் மீது தொடுக்கப்படும் கணையாகும்.

உன்னால முடிஞ்சத செய் என்று ஒருவனிடம் கூறும் போது அவன் உண்மையிலேயே அந்தக் காரியத்தை செய்யத் துவங்கி விடுகிறான். அது போலத்தான் இதுவும். பெண் வீட்டாரின் கௌரவத்தை மறைமுகமாக சீண்டுவது.

இன்றைய தினம் திருமணங்களில் வரதட்சணை தாண்டவமாடவில்லை என்பது உண்மைதான். ஆனால் அது சற்று அமைதியாக ஆடுகிறது. அமைதியாக ஆடுவதால், அதன் ஆட்டம் தனக்கு சௌகரியமாக இருப்பதால் மனிதர்களும் அதை ரசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

“என் பொண்ணுக்கு நான் பெரிய இடத்தில் சம்பந்தம் செய்து கொடுத்தேன்” என்று பெண்ணைப் பெற்றவர்கள் மார்தட்டிக் கொள்ள வேண்டும், “என் பையனுக்கு பெரிய பெரிய இடத்திலிருந்து இவ்வளவு நகையோடு எல்லாம் பெண் கொடுக்க முன் வந்தார்கள்” என்று பையன் வீட்டார் மார்தட்டிக் கொள்ள வேண்டும். இந்த எண்ணமும் கல்யாணத்தில் பணமும் நகையும் முன் நிற்பதை மனிதன் ஆதரிக்க காரணங்கள்.

எனது ஜாதியில் ஒரு வழக்கம் உண்டு. கல்யாணத்திற்கு பெண் கழுத்தில் கட்டப்படும் தாலி பெண் வீட்டாரால் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கப்படும் ரொக்கப்பணத்தில் தான் செய்யப்படும். சில இடங்களில் மாப்பிள்ளையின் சகோதரி வீட்டார் (திருமணமானவர் எனில்) தாலி செய்வர். எவ்வளவு ரொக்கம் தரப்படுகிறதோ அவ்வளவு கனமானதாக தாலி இருக்கும்.

தாலிதான் முக்கியம் என்றால் அது தங்கத்தில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதற்கு?

அது போல பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் “நான் உனக்கு மோதிரம் போடுவேன். நீ எனக்கு சங்கிலி போடு” என்ற கணக்கில் தங்கமாகவே பரிமாற்றம் செய்து கொள்வார்கள். அவர்களுக்கு உண்மையில் மனிதர்களை விட தங்கமே முக்கியம்.

இவற்றையெல்லாம் ஒரு மணமகன் எதிர்த்தால் “ நீ ஏன் தங்கம் வேண்டாமென்கிறாய்? உனக்கு உடம்பில் என்ன கோளாறு?” என்று கேட்டு அவமரியாதை செய்வார்கள். சந்தேகத்தின் பேரில் பெண் தரமாட்டார்கள்.

நான் சொல்வதெல்லாம் சிலருக்கு நம்ப முடியாததாகத் தோன்றும். பலருக்கு பைத்தியக் காரத்தனமாகத் தோன்றும். ஏனெனில் அவர்கள் எவரும் அவர்களது கல்யாணத்தில் இம்மாதிரி அனுபவங்களை சந்தித்திருக்க மாட்டார்கள்.

மணமான சிலருக்கு இது சரியென்று தோன்றினாலும் அதை சரியென்று ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். ஏனெனில் அவ்வாறு ஒப்புகொண்டால் அவர்களுடைய பல ஆண்டு குடும்ப வாழ்க்கை கேள்விக்குரியதாகிவிடும்.

இந்த அனைத்திற்கும் காரணம் நானோ நீயோ அல்ல. ஆனால் நாம்தான்.

17 கருத்துகள்:

 1. நல்ல பதிவு!

  //இன்றைய தினம் திருமணங்களில் வரதட்சணை தாண்டவமாடவில்லை என்பது உண்மைதான். ஆனால் அது சற்று அமைதியாக ஆடுகிறது. அமைதியாக ஆடுவதால், அதன் ஆட்டம் தனக்கு சௌகரியமாக இருப்பதால் மனிதர்களும் அதை ரசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.// உண்மையே!! மிகச் சரியான வரிகள்...

  பதிலளிநீக்கு
 2. //இவற்றையெல்லாம் ஒரு மணமகன் எதிர்த்தால் “ நீ ஏன் தங்கம் வேண்டாமென்கிறாய்? உனக்கு உடம்பில் என்ன கோளாறு?” என்று கேட்டு அவமரியாதை செய்வார்கள்.//

  அவமரியாதை செய்பவர்கள் அயோக்கியர்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் இளைஞர்கள் இவர்களை அலட்சியப்படுத்த வேண்டும்.

  நல்லதொரு பதிவு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவிற்கு வந்து கருத்துரைத்ததற்கு நன்றி

   அப்படி அவமரியாதை செய்யும் பட்சத்தில் பெண் கிடைப்பதில்லை. பெண் பார்க்கும் படலம் போராட்டக்களமாகிவிடுகிறது. சமூகத்தையே குப்பையில் கிடாசிவிடக்கூடிய துணிவு இதற்கு தேவைப்படுகிறது.

   நீக்கு
  2. உலகத்தோடு ஓட்ட ஒழுகல் - என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். வரதட்சணை வேண்டாம் என்று முதலிலேயே கூறிவிட்டால் அந்த வரனுக்கு எதோ ஒன்று சரியில்லை என்றுதான் பெண்ணைப் பெற்றவர்கள் மட்டுமல்ல, பெண்ணே நினைக்கத் தொடங்கிவிடுகிறாள். எனவே ஆரம்பத்தில் சற்று 'பிகு' செய்துவிட்டு, பேச்சுவார்த்தையின் இறுதிநிலையில் 'வேண்டாம்' என்று தெளிவுபடுத்தினால் உரிய மரியாதை கிடைக்கும்.

   - இராய செல்லப்பா நியூஜெர்சி.

   நீக்கு
  3. ஆரம்பத்தில் ஒன்றை சொல்லிவிட்டு பிறகு ஒன்றை சொன்னால் நாம் மாற்றி மாற்றி பேசுவதாகத்தான் இருக்கும். உலகமே ஒரு தவறான வழியில் சென்றால் நாமும் தவறான வழியில் செல்ல வேண்டுமா?

   நீக்கு
  4. உலகம் தவான வழியில் சென்றால் - அதை எப்படி தவறான வழி என்று சொல்ல முடியும்?

   நீக்கு
  5. உலகில் பெரும்பான்மையானவர்கள் ஒரு வழியில் செல்வதால் அது சரியான வழி ஆகிவிடாது. இன்று பெரும்பாலானோர் குடிக்கிறார்கள். அப்படியானால் குடிப்பது சரியான வழியா?

   நீக்கு
 3. காலம் காலமாகத் தொடர்ந்து பேசப்படும் ஒரு கருத்து. மாற்றங்களே வாழ்வின் நியதி என்றால் இதில் மட்டும் ஏன் மாற்றங்கள் காணோம் வரதட்சிணை என்பது கலாச்சாரத்துக்குக் கலாச்சாரம் வேறு படும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றங்கள் வாழ்வின் நியதிதான். ஆனால் சமுதாயத்தின் நியதி அல்ல. சமுதாயம் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

   நீக்கு
 4. காதலித்து மனம் புரிபவர்களிடையே வர தட்சனை கேட்கும் காலமிது..வரதட்சனை வேண்டாம் என்றால்...மாப்பிளைக்கு கோளாறுஎன்றே நிணைத்து விடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 5. உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்பதானது நேர்மறைப் பொருளையும் உணர்த்துவதுபோல தோன்றுகிறதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அப்படித்தான்.. ஆனால் அது நேர்மறைப் பொருளா? இல்லையா என்பது தெளிவாகக் கூறப்படுவதில்லை. முடிவில் அது எதிர்மறைப் பொருளாகவே தெரியும். வேண்டாம் என்று கூறினால் மட்டுமே சரியாக இருக்கும்

   நீக்கு
 6. "வரதட்சணை வாங்குவதுமில்லை கொடுப்பதுவுமில்லை" என்று உறுதியாக தாய் தந்தை இருந்தாலே போதும்... அனைத்தும் சுபம்... உதாரணம் என் குடும்பம்... (எனக்கு இரண்டு அண்ணன்கள், மூன்று அக்காக்கள்... அடியேன் ஆறுமுகன்...)

  பதிலளிநீக்கு