வெள்ளி, 31 மார்ச், 2017

சந்தோஷமும் துக்கமும் ஒன்றே

எனக்குத் தெரிந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் வாழ்வை அந்தந்தக் கணத்திலேயே வாழ்பவன். எல்லா எதிர்மறை விசயங்களிலும் நேர்மறையைக் கண்டுபிடித்து விடுவான். அவன் எந்தக் கஷ்டத்திலும் கலங்குவதே இல்லை.

ஒரு முறை அவனுடன் வேலை செய்த தெலுங்கும் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த ஒரு பேராசிரியையை அவன் தமிழில் கிண்டல் செய்து கொண்டிருந்தான். அதை வேறு ஒரு ஆசிரியை அவருக்கு ஆங்கிலத்தில் சொல்லிவிட்டார். உடனே அந்த தெலுங்கு ஆசிரியை இவனை ஆங்கிலத்தில் திட்டினார்.

இவன் ஆங்கிலத்தில், “மேடம், நான் உங்களைக் கிண்டல் செய்தது உங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் திட்டுவது எனக்கு எளிதாகப் புரிந்துவிடும். பிறகு நானும் உங்களை திட்ட ஆரம்பித்து விடுவேன்” என்றான் சிரித்துக் கொண்டே.

உடனே அந்த மேடம், “ஓ அப்படியா? உங்களால் கண்டு பிடித்து விட முடிகிறதா?. நான் உங்களை தெலுங்கில் திட்டினால் இங்கிருப்பவர் எவரும் உங்களுக்கு விளக்கிவிட முடியாது” என்றார்.

அப்போதும் இவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“இங்கிருப்பவர் எவருக்கும் அது புரியவில்லை என்றால், நான் எதற்காக கவலைப்பட வேண்டும். யாருக்கும் நீங்கள் திட்டுகிறீர்கள் என்றே தெரியாதே”

பிறகு அந்த பேராசிரியை இவனிடம் சண்டை போடுவதை விட்டுவிட்டார்.

எந்த விசயத்திலும் ஒரு சரி இருக்கிறது. அதை நாம் அறிந்து கொண்டால் பிறகு கவலையே பிறக்காது. மேலும் செய்யும் விசயத்தில் அதிகமான ஆசை இல்லாமல் செய்தால் புத்தி தடுமாற்றமடையாது.

ஓஷோ கூறுகிறார் கேளுங்கள்.

உன்னுடைய சோகத்தை நீ கொண்டாட்டமாக மாற்றினால் பிறகு நீ உன்னுடைய இறப்பையும் ஒரு உயிர்த்தெழுதலாக மாற்றும் திறமையைப் பெற்று விடுவாய்.

அதனால் இன்னும் காலம் இருக்கும் போதே அந்தக் கலையைக் கற்றுக்கொள். மரணம் உன் முன் வந்து நிற்பதற்குள் இரும்பைத் தங்கமாக மாற்றும் ரசவாதத்தைக் கற்றுக்கொள்.

ஏனெனில் உன்னால் சோகத்தை கொண்டாட்டமாக மாற்ற முடிந்தால் பிறகு உன்னுடைய இறப்பையும் உன்னால் கொண்டாட்டமாக மாற்றிவிட முடியும். 

உன்னால் நிபந்தனைகள் எதுவுமின்றி கொண்டாட முடிந்தால், மரணம் உனக்கு முன் வந்து நிற்கும்போது உன்னால் சிரிக்க முடியும். நீ ஆனந்தமாகச் செல்வாய். அப்போது மரணம் உன்னைக் கொல்ல முடியாது. மாறாக நீ அதைக் கொன்று விடுவாய். ஆதலால் ஆரம்பி. முயன்று பார். அங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.

1 கருத்து:

  1. சுவையான கருத்து.எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்க்கத்தகுந்தவனுக்கு எதிரிகள் குறைவுதான்.

    - இராய செல்லப்பா நியூ ஆர்லியன்ஸ்

    பதிலளிநீக்கு