செவ்வாய், 28 மார்ச், 2017

பதில் கூறுங்கள்


முதல் உலகப் போரில் நேசநாடுகள் தரப்பிலிருந்த பிரிட்டன் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு இன்றைய சவுதி, ஏமன், லெபனான், சிரியா, ஈராக், ஜோர்டான், பாலஸ்தீனம் என பல நாடுகளில் பரவியிருந்த ஓட்டோமானிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தி அங்கே தனது தலைமையை நிலை நிறுத்த முயற்சித்தது.
 
அதன் ஒரு பகுதியாக ஓட்டோமானிய ஆட்சிக்கு எதிராக பாலஸ்தீனத்தின் பெரும்பான்மையாக இருந்த அரபியர்களை தூண்டிவிட்டது. அதற்காக மெக்கா நகர ஷெரீபுடன் உடன்படிக்கை செய்து கொண்டது.

“ஓட்டோமானிய சாம்ராஜ்யத்தை வீழ்த்த அரபியர்கள் உதவி செய்தால், சுதந்திர அரபு தேசம் உருவாக பிரிட்டன் ஒத்துழைக்கும்” என்பதே அந்த உடன்படிக்கை. இதன் விளைவாக அரபியர்கள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு எதிராக போர் துவக்கினர். பிரிட்டனின் எண்ணமும் நிறைவேறியது.

இதற்கிடையே திரைமறைவில் காய்களை நகர்த்திய பிரிட்டன், “நாங்கள் உங்களுக்கு ஒரு தேசத்தை வழங்குவோம்” என்று பாலஸ்தீனத்தில் வெறும் பத்து சதவீதமாக இருந்த யூதர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டது.

ஓட்டோமானிய சாம்ராஜ்யத்தை அழிக்க பிரிட்டன் நினைக்கக் காரணம் ஏகாதிபத்தியம் மற்றும் எண்ணெய் அரசியல், யூதர்களோடு உடன்படிக்கை செய்யக் காரணம், ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி அமைவதை தடுக்க அங்குள்ள யூதர்களை பயன்படுத்திக்கொள்ள பிரிட்டன் நினைத்தது.

அரபியர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்திய பிரிட்டன் அவர்களின் தேசத்தில் பாதியைப் பிரித்து அதற்கு “இஸ்ரேல்” என்று பெயரிட்டு யூதர்களிடம் வழங்கியது. முஸ்லிம்களின் தலைமையிடமான உதுமானியக் கலீபகத்தையும் கைப்பற்றி அதை யூதர்களிடம் வழங்கியது. அதை மீட்க இன்று வரை பாலஸ்தீனர்கள் போராடி வருகின்றனர்.
 
கையிலிருக்கும் தனது பணத்தை செலவழிக்க மனமில்லாத ஒரு கஞ்சன் ஒரு குழந்தையின் ஆடையைக் கிழித்து இன்னொரு குழந்தைக்கு கோவணமாக கட்டிய செயலை உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானியும், ஒரு யூதருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட ஆதரிக்கவில்லை.

துருக்கி ஓட்டோமானிய சாம்ராஜ்யத்தை பிரிட்டன் அழிக்கும் போது அதில் ஒரு பகுதியாக இருந்தது பிரிட்டானிய இந்தியப் படை. இந்தியப் படை அங்கே பிரிட்டனுக்கு ஆதரவாக செல்லவேண்டும் என்று கூறியவர். மகாத்மா காந்தி. ஆகையால் ஓட்டோமானிய சாம்ராஜ்யம் அழிந்ததில், பாலஸ்தீனர் வஞ்சிக்கப்பட்டதில், இஸ்ரேல் உருவானதில் இந்தியாவின் பங்கு இருந்து விட்டது. 

போருக்குப் பின்னர் உதுமானியக் கலீபகத்தைக் காப்பதற்காக இந்திய முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் கிலாபத் இயக்கம். இதை உருவாக்கியவர்கள் அலி சகோதரர்கள். இதை அன்றைக்கு எதிர்தத்து இந்திய முஸ்லீம் லீக் என்ற இன்னொரு அமைப்பு.

விரைவில் கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார் மகாத்மா காந்தி. ஏனெனில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முஸ்லீம்களின் ஆதரவு தேவைப்பட்டது.

உதுமானியக் கலீபகத்தை அழிக்கத் துணைபோன காங்கிரசுடன் தன்னை இணைத்துக் கொண்டது உதுமானிய கலீபத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்ட கிலாபத் இயக்கம். பிரிட்டன் படைகளால் அழிக்கப்பட்ட கலீபகத்தைக் காக்க பிரிட்டன் அரசை வலியுறுத்தியது.

பாலஸ்தீனத்தைப் பிரித்து இஸ்ரேல் உருவாவதை சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா எதிர்த்தது. பின் சுதந்திர இந்தியாவின் காங்கிரசும், பாஜகவும் யூதர்களின் நாடான இஸ்ரேலுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டனர். 

இதைப் படிப்பவர்கள் சிந்தியுங்கள்...

அனைத்து அரசியல் நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. அரசியல் வாதிகளின் சுயலாபத்தை தவிர மக்களுக்கான பொதுநோக்கம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்பட்டாரா? இல்லை எதிராக செயல்பட்டாரா?

பிரிட்டனை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டியது காங்கிரஸின் நோக்கமென்றால் ஏன் பிரிட்டன் படைகளுக்கு உதவ வேண்டும்.?

கலீபகத்தை அழிப்பதில் உதவிய இந்திய தலைவனுடன் கிலாபத் இயக்கம் ஏன் இணைந்தது?

கலீபகத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்ட கிலாபத் இயக்கத்தை ஏன் இன்னொரு முஸ்லீம் அமைப்பு எதிர்த்தது?

மக்களுக்காக தலைவர்கள் இயங்குகிறார்கள் என்பதற்கான தடயமும், இந்தக் கேள்விகளுக்கு விடையும் எனக்கு கிடைக்கவில்லை.

3 கருத்துகள்:

 1. வரலாறு என்பது மிக நீண்டது நண்பரே. ஆழ்ந்து படித்தால் உங்களுக்குத் தேவையான விளக்கம் இருக்கும். ஹிட்லரின் படைகள் வென்றுவிடக்கூடாது என்று பிரிட்டனை ஆதரித்தார் காந்தி. அதே சமயம், இந்திய விடுதலைக்கு அதே ஹிட்லரிடம் ஆதரவு கேட்டு பிரிட்டனை எதிர்த்தார் சுபாஷ் சந்திர போஸ். நோக்கம் இந்திய விடுதலைதான் என்றாலும், இரு தலைவர்களின் பாதையும் வேறாக இருந்தது. ஆனால், தலைவர்களின் பாதையையும் நோக்கத்தையும் அன்று நிலவிய யதார்த்தங்கள் மாற்றிக்கொண்டே இருந்ததையும் காண முடிகிறது. இறந்தகாலத்தின் சிறப்பே, அதை நன்கு ஆராய்வதற்கான சான்றுகள் கிடைக்கின்றன என்பதுதான். எனவே மேலும் ஆராயுங்கள்.காந்தியின் பாதையில் தவறு இருக்கவில்லை என்று தெரியும்.
  -இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் காந்தியை குறை சொல்லவில்லை நண்பரே. பொதுவாக அரசியல்வாதிகளால் நல்லவர்களாக இருக்க முடியவில்லை என்பதைக் கூறுகிறேன். அது எல்லாருக்கும் பொருந்தும்.

   நீக்கு
  2. என்னுடைய அனைத்து பதிவுகளையும் படித்து பின்னூட்டம் இடுகிறீர்கள். மிக்க நன்றி.

   நீக்கு