சனி, 8 ஏப்ரல், 2017

நாகரீகம் மற்றும் சம்பிரதாயம்

மனிதன் நாகரீகம், பண்பாடு என்று சிலவற்றை கற்றுக் கொண்டுள்ளான். ஆனால் பெரும்பாலான வேளைகளில் நாகரீகம் உண்மையை மறைக்கக் கற்றுத்தருகிறது. உண்மையை மனிதர்கள் விரும்பாததால் அதைத் திரித்து வேறுவிதமாகக் கூறுவதற்கு நாகரீகம் பயன்படுகிறது.

இதோ இந்தக் கதையை கேளுங்கள்.

ஒரு வயதான மனிதன் அவனுக்கு பிடித்தமான பாருக்குள் நுழைந்தான். அங்கே வழக்கமாக இருக்கும் பெண் இல்லாமல் வேறு ஒருத்தி இருப்பதை கண்டான். அவன் அவளிடம், “அதிக நாட்களுக்குப் பிறகு நான் பார்க்கும் அழகான பெண் நீங்கள்தான்” என்றான்.

அந்தப் புதியவள் கூச்சத்துடன், “அதையே நான் உங்களிடம் திருப்பிக் கூற முடியாததற்கு வருந்துகிறேன்” என்றாள். அதாவது அவள் இவன் அழகானவன் இல்லை என்கிறாள்.

அதற்கு அந்த மனிதன், “நான் செய்தது போல் உன்னால் செய்ய முடியாதா? உன்னால் ஒரே ஒரு பொய் கூற முடியாதா?” என்றான்.

நீங்கள் ரோட்டில் நடந்து போகிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவரைக் கண்டவுடன் “ஹலோ குட் மார்னிங்” என்று கூறுகிறீர்கள். ஆனால் அதே நேரம் அவரும் அவ்வாறு கூற வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். இல்லையென்றால் வருத்தப்படுவீர்கள். அந்த மனிதனை மனதிற்குள் திட்டுவீர்கள். பிறகு அவருக்கு குட்மார்னிங் சொல்ல மாட்டீர்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே அந்த மனிதர் மீது பாசமெல்லாம் கிடையாது. இது ஒரு குட்மார்னிங்க் வியாபாரம். அன்பு ஒரு உண்மை. வியாபாரம் அதனிடத்தில் வந்த போலி.

நாம் உண்மையை போலியால் இடம் மாற்றி விட்டோம். “நீ இப்படிச் செய்தால் தான் நான் உனக்கு அந்தத் தின்பண்டம் வாங்கித்தருவேன்” என்று தாய் கூட குழந்தையிடம் கூறுகிறாள். உண்மையில் அவள் அப்படி இல்லையென்றாலும் குழந்தையின் மனதில் அது பதிந்துவிடுகிறது.

“நீ எனக்கு இதைச் செய். நான் உனக்கு இதைச் செய்கிறேன்” என்று கணவன் மனைவியிடம் கூறுகிறான். இதை அன்பென்று இருவரும் நம்பிக்கொள்கிறார்கள். 

பிறகு விவாகரத்து என்று வந்து விட்டால், இவள் அவனிடமிருந்து ஜீவனாம்சமாக எவ்வளவு கறக்க முடியும் என்று திட்டம் தீட்டுகிறாள். அவன் இவளுக்குத் தர வேண்டிய ஜீவனாம்சத்தை எப்படி தட்டிக்கழிக்கலாம் என்று யோசிக்கிறான்.

2 கருத்துகள்:

  1. "உண்மையை போலியால் இடம் மாற்றி விட்டோம்" என்ற வரி மிகவும் பிடித்தது. நிறைய எழுதுங்கள் நண்பரே!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு