செவ்வாய், 20 ஜூன், 2017

E=mc2

பொருட்களின் நிறைக்கும், அதில் பொதிந்துள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை மிகத் தெளிவாக விளக்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சமன்பாடு.

E=mc2

“ஒரு பொருளின் நிறையை, ஒளியின் வேகத்தின் வர்க்கத்துடன் பெருக்கினால் எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு ஆற்றல் ஒவ்வொரு பொருளிலும் மறைந்துள்ளது” என்பதே அந்த சமன்பாட்டின் சாரம்.

அதன்படி ஒரு கூழாங்கல்லுக்குள் கூட அபரிமிதமான ஆற்றல் ஒளிந்திருக்கிறது. ஆனால் நமக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்.

நவீன அறிவியல் உலகப் பொருட்கள் கதிர் வடிவிலும், நிறையுடன் கூடிய பொருள் வடிவிலும் என இரு நிலையில் காட்சியளிக்கின்றன என்று கூறுகிறது.

அணுவில் இருக்கும் வெளிப்புறப்பாதையான எலக்ட்ரான்களின் வட்டத்திலும், அந்த எலக்ட்ரான்களின் துணைகொண்டுமே பெரும்பாலான வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன. அந்த எலக்ட்ரான்களின் வட்டத்திலோ மிகக்குறைவான ஆற்றலே உள்ளது.

ஆனால் அதையும் தாண்டி அபரிமிதமான ஆற்றல் அணுக்கருவினுள் இருக்கின்றது. அதை வெளியில் எடுப்பதும் கடின காரியம். வெளியில் எடுத்தால் கிடைக்கும் ஆற்றலும் அபரிமிதமானதாகும்.

அப்படி அணுக்கருவினுள் இருக்கும் ஆற்றலை வெளியில் எடுத்துதான் அணுகுண்டு வெடிக்கப்படுகிறது. அணு உலைகள் மின்சாரத்தை தயார் செய்கின்றன.

நாம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் பொருளல்ல. ஆற்றல் ஓய்வில் இருக்கும் வடிவமே. அது போல ஆற்றல் என்பது பொருளிலுள்ள சக்தி இயக்கத்தில் வருவதே. ஆக பொருள், ஆற்றல் என்ற இரண்டும் பிரபஞ்ச இருப்பின் இருவேறு வடிவங்களே.

அபரிமிதமான ஆற்றல் துகள்களாக அணுக்கருவினுள் வைக்கப்பட்டுள்ளது. அணுக்கருவை பிளந்தால் எத்தனை ஆற்றல் வெளிப்படுமோ அத்தனை ஆற்றல் அந்தத் துகள்களை ஒன்று சேர்த்து அணுக்கருவை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் புரியும் படியாகக் கூற வேண்டுமாயின், ஒரு கிலோகிராம் பொருளில் உள்ள அனைத்து அணுக்கருக்களையும் பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றல், நாற்பது மெகா டன் டி.என்.டி வெடிமருந்தை வெடிக்கும்போது கிடைக்கும் ஆற்றலுக்கு சமம். 

வேறுவிதமாகக் கூறினால், அந்த ஆற்றலைக் கொண்டு நூறு லட்சம் வீடுகளுக்கு மூன்றாண்டுகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கமுடியும்.

ஒரு கிலோகிராம் பொருளுக்குள்ளே இவ்வளவு சக்தி இருக்குமாயின், எழுபது கிலோ மனிதனுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்? ஒரு லாரி மண்ணிலே எவ்வளவு சக்தி இருக்கும்?

அப்படியென்றால் இந்த பூமியின் மொத்த நிறையிலும் எவ்வளவு சக்தி இருக்கும்? பிரபஞ்சத்திலுள்ள மொத்த சக்தி எவ்வளவு இருக்கும்?
அப்பப்பா......! தலையே சுற்றுகிறதா?..

6 கருத்துகள்:

  1. தெரிந்த கருத்து. இருந்தாலும் புரியும்படியான அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  2. கூழாங்கற்களின் பலம் தெரிந்ததில்தான் குனிந்து கல்லெடுப்பதற்குள் நாய்கள் ஓட்டம் பிடிக்கின்றனவோ...????

    பதிலளிநீக்கு