ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

காயடிக்கப்படுகிறோம்


இப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நாட்டு ரகங்களுக்கும், மரபணுமாற்ற ரகங்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நாட்டுத்தக்காளி சீக்கிரம் வெம்பிப் போய்விடுகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் தாங்காது. அதிக புளிப்புச் சுவை, நிறைய தண்ணீர்ச்சத்து, மற்றும் அதிக விதைகள் கொண்டது. ஆனால் மரபணுமாற்றப்பட்ட தக்காளி இரண்டுவாரம் ஆனாலும் அப்படியே இருக்கும். குறைவான புளிப்புச்சுவை, குறைவான தண்ணீர்ச்சத்துடன் விதைகள் அற்றவை.

உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாதவர்கள் நாட்டுத் தக்காளிப்பழத்தை உண்பதால் அதன் விதைகளில் இருக்கும் அதிகப்படியான அமிலம் உப்பாக மாறி சிறுநீரகக் கற்களை உருவாக்கும் அபாயம் இருக்கிறது.

மரபணுமாற்றப்பட்ட தக்காளிப்பழத்தில் இந்த அபாயம் இல்லையென்பதால் அது சிறந்ததென்று கருதப்படுகிறது. அதாவது உடற்பயிற்சி செய்யாத தனது சோம்பேறித்தனத்தை மறைக்க நாட்டுத்தக்காளி மீது பழியைப் போட்டுவிட்டான் மனிதன். 

வெள்ளை நிறத்தில், பச்சை கலந்த கோடுகளுடன் கிடைக்கும் நாட்டுக்கத்தரிக்காய்க்கு பதிலாக மனிதன் ஊதா வர்ண பி.டி கத்தரிக்காய்களை கண்டுபிடித்து இருக்கிறான். அதுவும் ஒரு வாரமானாலும் வாடாமல், வதங்காமல் இருக்கக்கூடியது. அதிக மகசூல் தரக்கூடியது. பி.டி. கத்தரிக்காயில் புழுக்கள் அதிகம் தாக்குவதில்லை (ஏனெனில் அவ்வளவு விஷம்).

பீன்ஸில் ஒரு ரகம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது மரபணுமாற்றம் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. அதிக பச்சையாகவும் அதிகம் சதைப்பற்றுடனும் இருக்கிறது. ஆனால் சாப்பிட்டுப் பார்த்தவரையில் குறைவான சுவையே கிடைக்கிறது.

கடுகு ஏற்கனவே சிறியதாக இருக்கும் பொருள். ஆனல் ஒரு கடுகை நான்காக உடைத்த அளவில் ஒரு மரபணுமாற்ற கடுகை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த மரபணுமாற்றக் கடுகிலே என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. தாளிக்கும்போது அளவுக்கதிகமாக தெறிக்கிறது. பக்கத்தில் மனிதன் நிற்கமுடியவில்லை.

விதையில்லாத திராட்சைப்பழம், அதிகம் உவர்க்காத விதைகள் கொண்ட மாதுளம்பழம் கூட கண்டுபிடித்து இருக்கிறார்கள். மரபணுமாற்ற மாதுளம்பழத்தின் விதைகள் மிக இலகுவாக கடித்து மென்றுவிடக் கூடிதாக இருக்கின்றன. ஆனால் இயற்கையான மாதுளம்பழத்தின் விதைகளை அத்தனை எளிதாக கடித்து மென்றுவிட முடியாது. நமது பல் இடுக்குகளில் குத்தி இருந்துகொள்ளும்.

வெயிலுக்கு நாம் சாப்பிடும் தர்பூசணிப் பழத்தின் செடிகளை மாட்டுக்கு போடக்கூடாது என்கிறார் ஒரு விவசாயி. அதைச் சாப்பிடும் மாட்டுக்கு காய்ச்சல் வருகிறதாம். அதிலே என்ன செய்தார்களோ தெரியவில்லை.

மனிதன் வளர்ச்சி, விஞ்ஞானம், அறிவியல் இத்யாதி இத்யாதி என்று ஏகப்பட்ட முட்டாள்தனமான பெயர்களில் இயற்கையை நாசம் செய்துகொண்டிருக்கிறான்.

விளைவு?

இதோ ஆரம்பித்து விட்டது.

எல்லா மரபணுமாற்ற ரகங்களிலும் விதை நீக்கப்பட்டிருக்கிறது அல்லது அதன் இயற்கை வீரியம் குறைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் தாவரங்களை மறைமுகமாக காயடித்து விட்டான். காயடிக்கப்பட்ட தாவர உணவுகளை உண்ணும் மனிதன் படிப்படியாக காயடிக்கப்படுவான்.

சமீபகாலமாக குழந்தை இல்லாதவர்கள், இயல்பாகக் கருத்தரிக்க முடியாதவர்கள், விந்தணு வீரியம் இல்லாதவர்கள், கருமுட்டை வளர்ச்சி இல்லாதவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

நான் அது தொடர்பாக எந்த ஆராய்ச்சியையும் செய்யவில்லை என்றாலும் இதற்குக் காரணம் தாவரங்களை நாம் காயடித்ததுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

எல்லாம் ஒரு கணிப்புதான்.

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டல்லவா? அந்த எதிர்வினையின் அளவு தடுக்கமுடியாத நிலைக்கு செல்லும் முன் தடுக்கப்பட வேண்டும்.

அப்படி மனிதன் எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றால் வருங்காலத்தில் இயல்பாகக் கருத்தரிப்பதும், குழந்தை பெறுவதும் எங்கோ ஓரிடத்தில் நடக்கும் அபூர்வ நிகழ்வாகிவிடும். நமது சந்ததியும் பேரன், கொள்ளுப்பேரன்களுக்கு மேல் தொடராமல் போய்விடும்.

4 கருத்துகள்:

 1. நீங்கள் கூறும் காரணங்கள் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் ஆண்கள் காற்று புகாத, இறுக்கமான ஆடைகளை அணிவதாலும், மோட்டார் வாகனங்களில் நெடுநேரம் பயணிப்பதால்,நெடுநேரம் உட்கார்ந்து வேலைசெய்வதால் உடல் சூடு அதிகமாகி விந்தணுக்கள் இறந்துவிடுகின்றன. போதாக்குறைக்கு மடி கணினியை மடியில் வைத்து வேலைசெய்வதால் அதிலிருந்து வெளிப்படும் வெப்பமும் கூட சேர்ந்து கொள்வதால். மலட்டு தன்மை ஏற்படுகிறது. என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்போது வரையில் நான் கூறும் காரணங்கள் நிரூபிக்கப்படவில்லை தான். ஆனால் விரைவில் இதுவும் ஒரு காரணம் என்று பேசப்படும்.

   நீக்கு
 2. தங்கள் கவலையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் அதே சமயம், ஆர்கானிக் காய்கறிகள் என்ற பெயரில் இரண்டுமடங்கு விலையில் வேறொரு கும்பல் வியாபாரம் செய்யப் புறப்பட்டுவிட்டதே, என் செய்ய? மனிதன் தானாகப் பார்த்துத் தன்னைக் காத்துக் கொள்வதுதான் ஒரே வழி என்று தோன்றுகிறது. அமைப்புகளின்மீது நம்பிக்கை தகர்ந்துபோய்விட்ட நேரம் இது.

  -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி விற்பவர்களில் பல ஏமாற்றுப் பேர்வழிகள். அதுவும் உண்மைதான். நமக்குத் தேவையானதை நாமே பயிர் செய்யவும் வழி செய்ய வேண்டும்.

   நீக்கு